தற்போதைய* ஆட்சியில் மிக அற்புதமான ஒரு திட்டம் இந்த மகளிர் சுய உதவி குழுக்கள். இதனால் பயன்பட்டோர், படுவோர் பல்லாயிரம் பேர். அவர்களில் மகளிர் மட்டும் இல்லை அவர்களை சார்ந்த குடும்பங்களும்.

மகளிர் திட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் அங்க உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு குழுவை நடத்த ஒரு தலைவி, அதற்கு அடுத்து ஒரு பொருளாலர் என்று இருக்கிறார்கள், வாரம் ஒரு முறை குழுக்களில் உள்ள மகளிர் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்துகின்றனர், அதில் ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு தலைப்பில் அதை துறை சார்ந்த ஒருவர் பேசுகிறார், அதிலிருந்து விவாதங்கள், பிரச்சனைகளுக்கு வடிகால்கள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

குறைந்த பட்சம் ரூ.20000/- முதல் அதிக பட்சம் ரூ.1.00.000/- வரை கடன் உதவி கிடைக்கிறது. இது கிராமம் மற்றும் நகராட்சி என தனித்தனி திட்டங்களாக இருக்கின்றன். கிராமங்களுக்கு அதிகபட்ச நல திட்டங்கள் உள்ளன. இந்த கடன்கள் மாத தவணை முறையில் திருப்பி அடைக்க வேண்டும். இதில் உள்ள 20 பேரும் தனித்தனியே தலா ரூ.20000/- கடன் பெற்று உள்ளனர், காரணங்கள் வரவு செலவு நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை ஒரு முறை அடைத்துவிட்டால், திரும்ப இன்னொரு முறை சுழற்சியாக கடன் வசதி பெறலாம். இதில் கடன் தள்ளுபடி சலுகைகளும் குழுக்கள் வாரியாக அவ்வப்பொழுது அரசு வழங்குகிறது. அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் குழுக்கள் சலுகைகள், தள்ளுபடிகள் அதிகம் பெருகின்றன.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாராட்ட வேண்டிய ஒரு அம்சம், குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், கணவன் அலுவலகம் அல்லது வியாபாரம் பார்க்க சென்றதும், ஒன்று கூடி திண்ணையில் அமர்ந்து வெட்டி நியாயமும், ஊர் கதையும், வம்பும் பேசிக்கொண்டிருந்த நம் கிராமத்து, நகரத்து பெண்கள் இப்போது இந்த மகளிர் குழுக்களின் மூலம் தங்களின் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் ஓர் ஒற்றுமை மற்றும் ஒழுங்கை பார்க்க முடிகிறது. (ம்ம்.. ஆனால் நாம் இணையத்தில் அந்த வெட்டி நியாயம் பேசும் வேலையை விடாமல் அழகாக செய்து வருகிறோம்:( )

அனைவரும் ஒன்று போல் சீருடை அணிந்து, மகளிர் குழுவின் மேம்பாடு பற்றி பேசுவதும், வங்கி கணக்கு வழக்குகள்மற்றும், தங்கள் வரவு செலவு , கடன் கணக்குகளை பற்றி பேசுவதும், அதை சரியான முறையில் நீ தான் நான் தான் என்று இல்லாமல் அவரவரும் பொறுப்புடன் கணக்கு வழக்கு நோட்டுகளை அன்றாடம் எழுதி நிரப்பிவிடுவதும், குடும்ப வளர்ச்சிக்கு, குறிப்பாக குழந்தைகளின் கல்வி, வியாபார வளர்ச்சி, அல்லது முதல் முதலீடு, தொழில் சார்ந்த தேவைகள், வீட்டு விஷேஷங்கள், வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு மகளிர் குழுக்களின் மூலம் கிடைக்கும் வட்டி குறைந்த கடன்களை நல்ல முறையில் பயன்படுத்துதல் போன்றவை நடக்கின்றன.

ஒரு மகளிர் குழுவின் தலைவியை சந்தித்து, அவர்கள் செயற்படுத்தும் திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன் பலன்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லோரும் சரி சமமாக ஒன்று சேர்ந்து, இக்குழுக்களை திறம்பட நடத்திவருவது மிகவும் போற்ற க்கூடிய பெருமைப்படகூடிய ஒன்று. மிக சாதாரணமாக தினமும் அனைவரும் வங்கிக்கு சென்று வருவதும், அது சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தயக்கமின்றி பேசுவதும், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் எனக்கு சாதாரண விஷயமாக தோன்றவில்லை. நாம் நகரத்து பெண்களுடன் கிராமத்து பெண்களை ஒப்பிட்டு பார்க்கமுடியாது. வீடு, வயக்கால், வயல், சமையல், வெட்டி பேச்சு என்றே காலம் கழித்த இவர்களின் முன்னேற்றம் பார்த்து பிரம்மிக்கும் படியாக உள்ளது.

குறிப்பாக நான் இதற்கு முன் சந்தித்திருந்த பெண்களுக்கும், இப்போது மகளிர் குழுவில் சேர்ந்து தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட பெண்களுக்கும் வித்தியாசத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது, வியப்புடன் ரசித்தேன், அவர்களிடமிருந்த அந்த அறியாமை குறைந்துவிட்டதாக எனக்குப்பட்டது, தன்னால் தனியாக எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களின் பேச்சில், செயலில், நடத்தையில் பார்க்க முடிந்தது. இதில் வேலைக்கு போகும் பெண்கள் போன்று ஒரு இயந்திர வாழ்க்கையில் தன்னை புகுத்திக்கொள்ளாமல், சுதந்திரமாக முன்னேறி வருவதாக எனக்குப்பட்டது.

தில்லுமுல்லுகள் :-

1. இதிலும் சிலர் சரியான காரணங்கள் குறிப்பிட்டு கடன்கள் பெறுவதில்லை. இதற்கு வங்கி அதிகாரிகள் முதல் நடு தரகர்கள், குழுவில் இருக்கும் பெண்களும் உடைந்தையாக கூட்டாக செயல் படுகின்றனர்.

2. மேல் சொன்ன தில்லு முல்லுவில் முதலில் இருப்பது, மகளிர் குழு திட்டத்தின் கீழ் வாங்கிய கடனை அதிக வட்டிக்கு வெளியில் கொடுத்து வட்டி தொழில் செய்கிறார்கள். இதற்கு மேற்சொன்னவர்கள் எல்லோருமே காரணம்.

3. பெண்களுக்கே உரிய ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர், அதாவது, இந்த கடன்களை கொண்டு, நகைகள், உடைகள் என பகட்டுக்கும் பயன்படுத்துகின்றனர்.

4. கடன் வசதி வேண்டி வரும் கிராமத்து பெண்களை தகாத முறையில் நடத்த அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் மற்றும் உடன் பெண்களுமே உடந்தையாக இருக்கிறார்கள். இது பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள்.

இப்படிப்பட்ட செயல்கள் இங்கொன்று அங்கொன்றுமாக இல்லாமல் அடியோடு அழிக்கப்படவேண்டியவை. ஆனால் பெண்களே அதற்கு உடந்தையாக இருக்கும் போது வாயடைந்து நிற்கவேண்டி உள்ளதை மறுக்க முடியாது.

பரிந்துரைகள் :

1. வங்கி கடன்கள் அளிக்கப்படும் போது, சொல்லப்பட்ட காரணத்திற்காகத்தான் பயன்படுத்தப்பட்டதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த விஷயமாக இருப்பதால் இது நடக்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

2. மகளிர் குழுக்களில் வரும் பணத்திற்காக, மகளிரை கொண்டு பின்னால் இருந்து குடும்பத்தார் தேவையற்ற செலவுகளுக்காக மகளிரை கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தி பணத்தை பெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அதற்காகத்தான் மேற்சொன்ன கண்காணிப்பு முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும்

3. மகளிர் குழுக்களில் அன்றாட தேவைகளுக்கு கடன் வழங்குவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க நல த்திட்டங்களை அரசு கொண்டு வந்து அதை அமல் படுத்த அவர்களுக்கு கடன் உதவி செய்தால் நலம். இதனால் தொடர்ந்து ஒரு சுழற்சியாக ஒருவரை அடுத்து ஒருவர் என்ற வழக்கமான கடன் முறை மாறி, ஒரு கட்டத்தில் தங்கள் வருமானத்திலேயே அவர்கள் தங்களையும் தன் குடும்பத்தையும் கவனிக்கும் திறனை பெறுவார்கள். அதனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் அரசுக்கும் இதில் முதலீடு செய்ய தேவை இருக்காது, அல்லது அதிகமான அளவு குறைந்து போகும்.

4. சிறுத்தொழில், கல்வி போன்றவற்றிற்கு முன்னுறிமை கொடுத்து கடன் தொகையை அதிகப்படுத்தலாம். சிறுதொழிலுக்கு தேவையான திட்டங்களை /வசதிகளை அரசு/தனியார் துறைகளின் உதவியோடு குழுக்களுக்கு பரிந்துரை செய்யலாம். (இது வரை அப்படி எதுவும் அரசு செய்யவில்லை. பணம் கொடுப்பதை மட்டும் செய்துவருகிறது)

5. தனிப்பட்ட நபர் கடன் எந்த காரணமாக இருந்தாலும் கொடுக்கும் படி செய்யலாம். அதற்கு காரணம் நான் பார்த்தவரை, ஏதோ காரணங்கள் சொல்லி கடன்கள் வாங்கப்பட்டு உள்ளன. சில காரணங்கள் என்னுடைய பார்வையில் இப்படி க்கூட தேவைகள் இருக்குமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அப்போது அந்த காரணங்கள் கடன் வாங்கவே சொல்லப்பட்டவையாக எனக்கு தெரிந்தன. சில சமயங்களில் உண்மையான காரணங்கள் சொன்னால் கடன் இல்லாமல் போகக்கூடும் என்பதால் பொய்யான காரணங்களை கொடுத்து கடன் பெறுகிறார்கள் என்பது மட்டும் இல்லை, ஒரு பொய்யான காரணம் கூறும் போது அதற்கு தேவையான சப்போர்ட் டாகுமென் டுகளும் பொய்யாக தயார் செய்யும் நிர்பந்தத்திற்கு அவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். அதனால், தனிநபர் கடன் களுக்கான காரணங்களை எதுவாக இருந்தாலும் பரிசீலனை செய்து அரசு கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் தேவையற்ற ஊழல் குறையும்.

6. குழுக்குளின் தலைமை பொறுப்பை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்ற வேண்டும். தலைமை மாறும் போது, அந்த தனிப்பட்ட பெண்ணின் தலைமையை பொறுத்து நல்ல பல விஷயங்கள் நடைமுறை படுத்த வாய்ப்பிருக்கிறது. அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரவேண்டும்

7. ஒரே ஊரை சார்ந்த மகளிர் குழுக்களுக்கு இடையே போட்டிகள் வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை இன்னமும் திறமையாக செயல்பட வைக்க ஊக்கம் கொடுக்கலாம்.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்.... உருப்படியா ஏதோ மேட்டர்.. அதனால நான் ஒன்னியம் சொல்லாமா இருக்கறது எனக்கு நல்லது...


பீட்டர் தாத்ஸ் : “Ask not what the government can do for you. Ask why it doesn't.”