தலைமுடி இதனால் பலருக்கு பல பிரச்சனைகள். குறிப்பாக சின்ன வயதில் முடிக்கொட்டி விடுபவர்கள் படும் பாடு இருக்கிறதே.. அவர்களை கேட்டால் தெரியும் இந்த தலைமுடி அவர்களுக்கு எத்தனை முக்கியம் என்று.

தலைமுடி அதிகமாக கொட்டியிருப்பவர்கள் ஞாபகமறதி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. இது தவிர்த்து குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, மாமா என்று யாருக்கும் இப்படி இருந்தால் அவர்கள் மேல் பழியை போட்டு உங்களால் தான் எனக்கு இப்படி இருக்கிறது பரம்பரை குறை இது என்று சொல்லிவிடலாம்.

நடிகர் சத்யராஜ் போல "நாங்க எல்லாம் தலைக்கு மேல் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் இல்லை, தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் திரைபடங்களில் பாவம் விக்'ஐ நம்பி தான் தன் வாழ்க்கைக்கு தேவையானதை அவரும் சம்பாதிக்கிறார்.

என்னுடைய மூன்று வயது போட்டோவில் "பாப்" கட் தலை முடியோடு இருப்பேன். ரொம்ப அழகாக இருக்கும். ஆயாவிற்கு அது பிடிக்காது நன்றாக எண்ணெய் தேய்த்து முடியை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்து ஒரு காலக்கட்டத்தில் "இவமுடிய எவளால பின்ன முடியும். .பிடித்து சீவ முடியல, போடி போ நீயே பின்னிக்கோ" என்று எல்லோரும் விரட்டும் அளவிற்கு அடர்த்தியாக இருந்தது. ஆயா மட்டுமே என் தலையை தொடுவார்கள். அவர்களை விட்டால் நானே. எனக்கு குழந்தை பிறந்தபோது ஆஸ்பித்திரியில் இந்த தலைமுடியால் நான் பட்ட அவஸ்தை அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

குழந்தை பெற்ற உடம்பு சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த மேட்டர் எல்லாம் எனக்கு அப்போது தெரியாது ஆயா சொல்லி தர மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். எப்பவும் போல என் தலைமுடியை யாரும் பின்னிவிட முன்வாராததால், நானே அதை சீவி சிங்காரிக்க முற்பட்டு உடம்பு அலண்டு போக, ஜன்னி வந்தது தான் மிச்சம். தலைகுளித்தால் 2 நாட்களுக்கு உள்ளே ஈரம் இருக்கும், அது ஒரு அவஸ்தை. முடியை லூஸ் ஹேர் ஆக விடமுடியாது, விட்டால் போயிற்று, அச்சு அசல் பிசாசு போலவே இருக்கும்.

இந்த தலைமுடியின் நிஜமான பிரச்சனைக்கு வருகிறேன். இப்போதைய சூழ்நிலையில் உயர் பதவி செல்ல செல்ல ரொம்பவும் எலிகண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் இருக்கிறோம். சில சமயங்களில் நம் வேலை சம்பந்தப்பட்டு நாம் பழகும் மனிதர்கள், கிளைன்ட்ஸ், பிஸினிஸ் விஷயமாக சந்திக்கும் உயர் அதிகாரிகள் எல்லோருமே முதலில் பார்ப்பது நம் தோற்றத்தை. அதில் முதல் இடம் தலைமுடி, நன்றாக எண்ணெய் தடவி வழித்து சீவி கொண்டு போகும் போதே. ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், அதற்கு பிறகு தான் நம்முடைய பேச்சு, நம் வேலை சம்பந்தப்பட்ட கோப்புகள், பிரசன்ட்டேஷன் எல்லாமே இதற்காகவே வெளியில் செல்லும் போது லூஸ் ஹேர் ஸ்டைலில் செல்ல வேண்டியுள்ளது.

எனக்கும் இந்த தலைமுடியை என் இஷ்டத்திற்கு வெட்டிக்கொள்ள ஆசை.. ஆனாலும் என்னவோ இன்னும் செய்யவில்லை. ஜிம்'ல் தோழி தென்றல் நான் செல்லும் நேரத்திற்கு வருவார். ஒரு நாள் அவரின் தலைமுடி காதுக்கு மேல் வரை ஏறி, கந்தரகோலமாக வெட்டி இருந்தது. காலையில் அவளை அப்படி பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி. தென்றல் உன் தலைமுடிக்கு என்ன ஆச்சி என்றேன். அதற்கு அவள், அவளின் பெயரை போலவே மென்மையாக சிரித்து.. கவி.. கூல்.. நேத்து ராத்திரி ஒரு 12 மணி இருக்கும் இந்த தலைமுடி எனக்கு வேண்டாம் என்று என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.. எழுந்து..நானே கட கட'ன்னு வெட்டிவிட்டேன்.. ஓவர் ..!! எனக்கு டென்ஷன் குறைஞ்சு போச்சி, நானே வெட்டியதால் இப்படி ஆகிபோச்சி.. We need this kind of changes in our day today life, so better you do dont think more.." இது மாதிரி செய்துடு அப்புறம் தலை எழுத்து பார்லர் போய் சரி பண்ணனும் ' என்றாள்.

எனக்கு ஆச்சரியம், சிரிப்பு எல்லாம் சேர அடக்க முடியாமல் அவளை பார்த்து சிரித்தேன், அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். இது தான் மாற்றம் என்பது, அவள் அதற்கு அப்புறமும் சொன்னது, எவ்வளவு நாள் என் முகத்தை இப்படி ஒரே மாதிரியாக பார்த்து கொண்டு இருப்பது.. இப்போது இந்த தலை அலங்காரத்தில், நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, நீயும் செய், உனக்கும் வரும் என்றாள். ஆழ்ந்து யோசித்து பார்த்ததில் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.

புது வீடு, புதிய உடைகள், புதிய வண்டி, புதிய நட்பு, புதிய வானம், புதிய மண் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மாற்றங்கள் அவசியம் தேவை அது எந்த ரூபத்தில் எப்படி இருந்தால் என்ன... ??? மாற்றங்கள் கண்டிப்பாக நமக்கு புதுவிதமான மனதிடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கத்தான் செய்கின்றன. தலைமுடி'யும் இதில் அடங்கும்.

அணில் குட்டி அனிதா :- .............போச்சி போ?!! தலையில முடி இல்லாதவங்க எல்ல்லாம் இந்த பதிவை படிச்சி எரிச்சல் படணும்னே எழுதின மாதிரி இல்ல?!

பீட்டர் தாத்ஸ் :- Hair brings one's self-image into focus; it is vanity's proving ground. Hair is terribly personal, a tangle of mysterious prejudices. ~Shana Alexander