தரமணியில் ஐடி கம்பெனிகள் அதிகமாக இருக்கும் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு வாரம் முன்பு நம் மத்திய அமைச்சர் டி.ர்.பாலு வந்திருப்பார் போல் இருக்கிறது. போஸ்டரில் அவர் பெயரை பார்க்கமுடிந்தது. வேறு யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு 7, 8 மாதங்களாக அலுவலகத்திற்கு தரமணி வழியாக சென்று வருகிறேன். நீக்கப்படாத தெரு முழுக்க பரவிக்கிடக்கும் குப்பை, சாக்கடை தண்ணீர் நிரம்பி வழிந்து தெருவில் குட்டையாக தினமும் பார்க்க முடிந்தது, பெரிய பெரிய ஒயர்கள் அறுந்து விழுந்து நடுரோடிலேயே அகற்றப்படாமல் கிடந்தது, நானுமே அதன் மேல் வண்டியை ஓட்டி சென்றுக்கொண்டு தான் இருந்தேன். வேறு வழியும் இல்லை, நின்று தனிஆளாக அதை எடுத்து போடும் அளவிற்கு அந்த ஒயர்கள் இல்லை, தெரு ஓர கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து சுருள் சுருளாக மிக நீளமான, தடிமனான ஒயர்கள்.

மத்திய அமைச்சர் வருகிறார் என்றவுடனே, ஒரே நாளில், ஒரு நாள் என்று கூட சொல்ல முடியாது சில மணி நேரங்களில் அந்த தெரு படு சுத்தமாக மாற்றப்பட்டது மட்டுமல்ல. நடுவே அலங்காரத்திற்காக திடீரென்று நிஜமான செடிகள் நடப்பட்டு இருந்தன. அட!! சில மணி நேரங்களில் இவர்களால் செய்ய முடிந்த வேலையை மாதக்கணக்காக (நான் மாதக்கணக்காக தான் பார்க்கிறேன்), செய்யாமல் இருக்கிறார்களே?!. அதில் ஆச்சரியமான விஷயம் ரோடுகளில் நடுபகுதியில் திடீரென்று முளைத்த செடிகள் !! ?!!

இதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், ஏன் நம் அமைச்சர்கள் எல்லாம் காலை, மாலை இரண்டு வேலையும் சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஏதோ ஒரு டீ கடையில் டீ குடிக்க சென்று வரக்கூடாது.? வீட்டில் குடிக்கும் டீ' ஐ கடையில் சென்று குடிக்கலாமே. அமைச்சர் டீ குடிக்க வருகிறார், என்று அந்த ஏரியா முழுதும் அன்றே சுத்தம் செய்து விடுவார்கள். அமைச்சர்களும் பொதுமக்களை சந்தித்த மாதிரி இருக்கும், டீ'யும் குடித்த மாதிரி இருக்கும்.

தமிழக அரசாங்கம் கூட பள்ளியில் ஆசிரியர்களுக்கு டைம் டேபிள் போட்டு கொடுப்பது போன்று இந்த அமைச்சர் காலையில் இந்த ஏரியா டீ கடை, மாலையில் இந்த ஏரியா டீ கடைக்கு டீ குடிக்க போக வேண்டும் என்று திட்டம் போட்டு கொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.

இப்படி எல்லாம் திட்டம் போட்டு தான் நாம் நம்மை சுற்றி இருக்கும் இடத்தையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க இயலும் என்ற நிலைமைக்கு வந்து விட்டதாக தோன்றுகிறது.

மாதக்கணக்காக அகற்றப்படாத குப்பை மேடுகள், ஆண்டுகளாக சுத்தம் செய்யாத பொது கழிப்பிடங்கள், அல்லது பொது கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட இடங்கள், பொங்கி பொங்கி வழியும் கழிவுநீர் கால்வாய்கள் என்று சென்னை நகரம் மிகவும் மோசமாகி வருகிறது. ஊருக்கு சென்றுவிட்டு திரும்பும் போது தாம்பரம் பேருந்து நிலையத்தை பார்க்க நேர்ந்தது. கிழக்கு தாம்பரத்தில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 10-15 கடைகள் நெடுக ஒன்றும் பாதியுமாக உடைக்கப்பட்ட நிலையில், பொது கழிப்பிடமாக ஆக்கப்பட்டு இருக்கிறது. அத்தனை பேருந்துகளும் இந்த துர்நாற்றம் வீசும் கடைகளின் மிகஅருகாமையில் தான் வரிசையாக நிற்கின்றன. இந்த கடைகள் ஏன் இடிக்கப்பட்ட நிலையில் உள்ளது, ஏன் பொது கழிப்பிடமாக மாறியது, இது எப்போது சுத்தம் செய்யப்படும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. குழந்தைகள், வயதானவர்கள் என்று எல்லோரும் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்.

இப்படி இருக்கும் இடத்தில் நடு நடுவே சந்தில் சிறிய பெட்டி கடையில் வியாபாரம் நடந்தவாறு இருக்கிறது. அந்த பெட்டிக்கடைகள் ஏதாவது ஒன்றுக்கு நம் அமைச்சர் யாராவது டீ குடிக்கவோ, பேப்பர் படிக்கவோ வந்தால், இந்த இடம் கூட சில மணி நேரத்தில் சுத்தமாகி விடும் அல்லவா?

ஆனால் இப்படிப்பட்ட இடங்களை நாசப்படுத்தும் பொதுமக்களை என்ன செய்வது? தன் அன்றாட வேலையை சரிவர இல்லை சுத்தமாகவே செய்யாமல் இருக்கும் துப்புறவு தொழிலாளியை என்ன செய்வது?

அணில் குட்டி அனிதா: கவி.. வேகமாக போயி நீங்களே க்ளீன் பண்ணிட்டு வந்து இருக்கலாமே... ? செய்தீங்களா... ?? அம்மணிக்கு இப்படி பக்கம் பக்கமாக எழுத தெரியும்.....நல்லா வாய் கிழிய பேச தெரியும்....வேற ?!! மக்கா உங்க எல்லாருக்கும் அம்மணிய நல்லாவே கும்ம தெரியும்..... எப்பவும் போல கும்மாம நல்லா நாலு சாத்து சாத்திட்டு போங்க..!! ஒகே !!

பீட்டர் தாத்ஸ் : Keep your own house and its surroundings pure and clean. This hygiene will keep you healthy and benefit your worldly life.