இந்த பதிவை தொடங்கும் முன் "பதிவர்களின் இரு முகங்கள்" என்று தான் தலைப்பு இட்டு இருந்தேன்.. ஆனால் முன்னரே இப்படி வைத்த தலைப்புகளினால், உள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் தலைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்வினை பதிவுகள் வந்துவிட்டன. அதனால் தலைப்பை மாற்றி/திருத்தி பொதுவாக மனிதனின் மறுபக்கம் என்று வைத்து இருக்கிறேன்..

மனோபாலா' என்று ஒரு இயக்குனர், இப்போது காமெடி கதாபாத்திரங்களில் நிறைய நடிக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அவரை பற்றி சொல்லும் போது "வீட்டில் மிகவும் கெடுபிடியான ஆள், எளிதில் பேசவைக்க முடியாது சிரிக்க வைக்கமுடியாது, எப்போதும் சீரியஸாக இருப்பார்." என்றனர். மதுபாலா வீட்டில் இப்படி இருப்பார் என்பது யூகிக்கமுடியாதது உண்மையல்லவா?. அது அவரின் மற்றொரு முகம்..

என்னுடைய 8-10 வகுப்பு வரை தமிழ் பாடம் எடுத்த ஆசிரியை மிகவும் கடுமையாக எங்களை நடத்துவார். அவரிடம் அடிவாங்கி நொந்து போனவர்கள் ஏராளம். அடிவாங்க பயந்தே பலர் அவர் வரும் வகுப்பு நாட்களில் விடுப்பு எடுப்பார்கள். அவருக்கு அப்போது ஒரு 40-45 வயது இருக்கும் ஆனால் குழந்தை இல்லை. இந்த மாணவிகள் அவருக்கு இருந்த இந்த குறையை சொல்லி திட்டுவார்கள். இப்படி நம்மை எல்லாம் கொடுமை படுத்துவதால் தான் கடவுள் அவருக்கு குழந்தை கொடுக்கவில்லை என்பார்கள். நான் மட்டுமே "யேய் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் டீச்சர் ரொம்ப நல்லவங்க.. அவங்க வீட்டுக்கு போய் பாருங்க.. அவங்க எவ்வளவு நல்லா அன்பா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது.. அவங்களை சரியா புரிந்து க்கொள்ளாமல் இப்படி பேசாதீர்கள்" என்பேன். ஆமாண்டீ நீ எல்லா டீச்சருக்கும் செல்லப்பிள்ள நீ அப்படித்தான் சொல்லுவ.. நீ அடி வாங்கிப்பாரு அப்ப த்தெரியும் என்பார்கள். நாம ஒழங்கா இருந்தா ஏன் அடிக்கிடைக்கும்? அதை யாரும் யோசித்து பேசவதில்லை. கண்டிப்பாக தமிழ் ஆசிரியை தேவையில்லாமல் யாரையும் அடிப்பதில்லை. எங்களின் வீட்டுக்கு அருகில் தான் அவர்கள் வீடு, பள்ளி விட்டு செல்லும் போது அவருடன் செல்லுவேன், வழியில் பேசவே மாட்டார், வேகமான நடை, நானும் பின்னால் ஓடுவேன். ஒரு முறை எதற்கோ வீட்டுக்கு அழைத்து இருந்தார், சென்று தயக்கத்தோடு வெளியில் நின்றிருந்தேன், அட.. ஏன் புள்ள வெளியில நிக்கற வா வா... என்றவர், நான் உள்ளே சென்றதும் என்னை அனைத்து உச்சி முகர்ந்தார். என்னால் நம்பவே முடியவில்லை.. அதுவும் அவர் பள்ளியில் சிரித்து பார்த்ததே இல்லை ஆனால் திறந்த வாயை மூடாமல் சிரித்தபடியே இருந்தார். இப்படியும் இரண்டு இடத்தில் வேறு வேறாக ஒரு மனிதனால் இருக்கமுடியுமா என்று யோசிக்க வைத்த முதல் ஆசிரியை அவர்கள்தான்.

அந்த வயதிலேயே ஆரம்பித்துவிட்டது மனிதர்களை பற்றிய என்னுடைய அலசல். யாரையும் இவர் இப்படித்தான் என்று எதைவைத்தும் முடிவுக்கட்ட கூடாது. அவரவருக்கு அப்படி இருக்க ஒரு சொந்த காரணம் இருக்கிறது.. இருக்கிறார்கள்.

பதிவர்கள் பக்கம் வருகிறேன், அதிகம் பார்ப்பது ஒருவர் எழுத்தை க்கொண்டு அவரை கணிப்பது. இது நான் பார்த்தவரையில் எல்லோரும் செய்கிறார்கள். என்னை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம், என் எழுத்தை வைத்து நான் கருப்பாக குண்டாக குள்ளமாக இருப்பேன். .என்று நினைத்து நான் அப்படி இல்லாமல் இருப்பதை பார்த்து என்னை கேட்டவர்கள் உண்டு. எப்படி என் தோற்றத்தை என் எழுத்தை கொண்டு நிர்ண்யிக்கிறார்கள்? ஒருவர் மட்டும் ஏன் நீங்கள் அப்படி யாரையும் யூகிக்க மாட்டீர்களா? என்றார். சத்தியமாக இல்லை. ஏன் அவரின் குணத்தை க்கூட யூகிப்பதில்லை, பதிவரை தனிப்பட்ட முறையில் தெரிந்தால் ஒழிய அவரை பற்றிய சொந்த அலசல் கண்டிப்பாக நான் செய்வதில்லை.

எழுதுவதை வைத்து இவர் இப்படித்தான் என்று ஊகிப்பது எப்படி சரியாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பதிவர் போலி. அவரை நமக்கு தெரிந்த அளவு அவரின் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஒருவர் இருக்கிறார், அவர் வீட்டில் ஒரு முகம், வெளியில் வந்தால் நண்பர்களிடம் ஒரு முகம், தோழிகளிடம் ஒரு முகம், காதலியிடம் ஒரு முகம், பெண் தோழிகளிடம் ஒரு முகம், இதை தவிர்த்து இரவில் ரகசியமாக பேசும் பெண்களிடம் தனி முகம், இவை எல்லாவற்றையும் விட சூப்பர் அவர் எழுத்தின் அசத்தலான பொதுநல முகம். அந்த சுயநலவாதியின் ஒவ்வொரு எழுத்திலும் பொது நலம் கும்மி அடிக்கும், ஆனால் உண்மையில்...????????? கேள்விகுறிகள் மட்டுமே பதில். இந்த அத்தனை முகங்களும் தெரிந்த பிறகு அந்த சுயநலவாதி'யின் எழுத்தை கூட்டி பெருக்கி குப்பைக்குள் போட வேண்டியதாக இருக்கிறது. ஆக, எழுதுவதை வைத்து பெண்ணியவாதி, ஆணாதிக்கவாதி, இந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர், பார்ப்பனர்'களுக்கு எதிரானவர் அல்லது ஜால்ரா அடிப்பவர் இப்படி போய் கொண்டே இருக்கும்.

இப்படி எழுதுவது ஒன்றாகவும், நடந்து கொள்வது ஒன்றாகவும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், மாறாக எழுதுவது இல்லாவிட்டாலும் நன்றாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இல்லை இரண்டும் இருக்கலாம். சில பதிவர்களை நேரில் பார்ப்பதற்கு முன் அவரை பற்றிய ஒரு நல்ல மதிப்பு இருக்கும், பதிவரை பார்த்த பிறகு அவர் பேச்சு நடத்தை இவற்றை பார்த்தபின் அவரை பற்றிய நம் மதிப்பு பூச்சியமாக மாறக்கூடும். மாறாக இன்னும் அதிகமாகவும் கூடும்.

ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை. அவர்களின் உள்ளிருப்பது தான் எழுத்தாக வருகிறது என்றால் நான் மேல சொன்ன ஒரு சுயநல பதிவரை எந்த விதத்தில் சேர்த்துக்கொள்வது. தயவு செய்து எழுத்தைக்கொண்டு ஒருவரின் குணத்தையும், செயலையும், உணர்வையும், அவரின் தோற்றத்தையும் முடிவு செய்யாமல் இருப்போமே...

அணில்குட்டி அனிதா :- ஆமா கவி இப்படி எல்லாம் சொன்னத வச்சி அவங்க ரொம்ப அழகா இருப்பாங்கன்னு மட்டும் நீங்க நெனச்சிடாதீங்க...

பீட்டர் தாத்ஸ் :- “The being without an opinion is so painful to human nature that most people will leap to a hasty opinion rather than undergo it.”