வேளச்சேரி அடையார் பேக்கரி, கேக் வாங்க சென்றேன்.. வாங்கிவிட்டு கூல் டிரிக் ஒன்று வாங்கி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்த நேரம் ஒரு பகட்டு குடும்பம் வந்தது. ஒரு அம்மா, ஒத்த வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உடன் வந்தனர்.

அதில் அந்த அம்மாவின் நடை உடை'யிலிருந்து நல்ல வசதி என்று தெரிந்தது. குழந்தைகளில் இரண்டு அந்த அம்மாவின் குழந்தைகள் என்பதும் அவர்களின் முக சாயலிலிருந்தும், உடைகளிலிருந்தும் தெரிந்தது. ஒரு பெண் குழந்தை மட்டும் ஒரு சாதாரண நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா போட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு ஒரு 10 வயது இருக்கலாம். அந்த குழந்தை அந்த வீட்டில் வேலை செய்கிறாள் என்பது அவள் உடையை பார்த்ததும் தெரிந்தது.

இந்த அம்மா அந்த இரண்டு குழந்தைகளிடம் மட்டும் என்ன வேண்டும் என்ற கேட்க..அவர்கள் இருவரும் யோசித்து, எல்லாவற்றையும் பார்த்து.. கேக், சிக்கன் ஃப்வ் என்று ஆர்டர் செய்ய, இந்த அம்மாவும் அவர்களுக்கும் சிக்கன் ஃபவ் ஒன்று ஆர்டர் செய்துவிட்டு.. இந்த குழந்தைக்கு மட்டும் ஒரு சின்ன மாசா பாட்டிலை வாங்கி கையில் கொடுத்தார்.

அந்த குழந்தையும் அதை கையில் வாங்கி குடிக்க ஆரம்பித்தது.. ஆனால் அந்த குழந்தையின் கண்கள் இந்த இரண்டு குழந்தைகள் வைத்து இருந்த அந்த கேக்'கின் மேல் தான் இருந்தது. அதையும் அந்த குழந்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தனக்கு கொடுக்கப்பட்ட மாசா'வை குடித்தது..

என்ன கொடுமை இது.. ஒரே வயது ஒத்த குழந்தைகள், ஒரே மாதிரியான ஆசைகள், விளையாட்டுத்தனம், சிந்தனை , செயல்கள் எல்லாமே இருக்கும். வேலை செய்யும் குழந்தை என்பதால் அதை இப்படித்தான் நடத்தப்படவேண்டுமா? ..அப்படி நடத்துபவர்கள் அந்த குழந்தையை இப்படி பொது இடங்களுக்கு இப்படிப்பட்ட உடையுடன் அழைத்து வராமலேயே இருக்கலாமே..?!

இந்த குழந்தைகள் மனதளவில் எத்தனை வேதனைப்படுவார்கள், அவர்களின் ஏழ்மையினால் ஏற்பட்ட இயலாமை அவர்களின் மனதில் ஏற்படும் சிறு வயது சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஏக்கங்கள் அவர்களது வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளில் என்ன பாகுபாடு?!! மனிதர்களிலேயே பாகுபாடு கூடாது. .இதில் குழந்தைகளில்..?!!

எனக்குமே இப்படி நடந்து இருக்கிறது என்னுடைய திருமணத்தின் போது. எதற்குமே உதவாத, என்னை விட வயதில் பல மடங்கு அதிகமான ஒரு நபரை என் சொந்தங்கள் எனக்கு பார்த்த போது, என் பெரிய அண்ணன் என் அத்தையிடம் " ஏன் அத்தை உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்ப்பீர்களா? ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கொள்கிறீர்கள் ?" என்று கேட்டார். அதற்கு அத்தை மிகவும் பொறுமையாக நிதானமாக "கண்டிப்பாக என் பெண்ணிற்கு அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, காரணம் நான் இருக்கிறேன், மாமா இருக்கிறார், அதற்கு மேல் என் பெண்ணிற்கு 100 என்ன 150 பவுன் நகை போடுவேன்( இது நடந்தது 90 களில்) , உன் தங்கைக்கு உன்னால் அவ்வளவு செய்ய முடியுமா? , உன்னால் முடியாது! அதனால் யாருக்கும் பாரமில்லாமல் அந்த பெண்ணை கேட்பவர்களுக்கு கட்டிக்கொடு.. வீடு வீடாக விட்டு வைக்காதே.. வயது பெண்ணை எவ்வளவு நாள் நாங்கள் பார்த்துக்கொள்வது ?" என்றார். இந்த பேச்சு நடக்கும் போது நானும் அங்கு இருந்தேன்.. இன்னமும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தைகள் இவை. பசுமரத்து ஆணிபோன்று பதிந்து போன வார்த்தைகள் இவை.

உண்மையை தான் அவர் சொன்னார், அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை என்றாலுமே, ஏழையாக இருந்தாலும் ஓரளவுக்கு பார்த்தாவது ஒரு மாப்பிள்ளைக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற மிக சாதாரண நல்ல எண்ணம் இல்லாதது கூட பரவாயில்லை, சொந்த அண்ணன் பெற்ற குலவிளக்கு , அந்த அண்ணன் தான் இவர்களுக்கு எல்லாம் தன் பணத்தில் திருமணம் செய்துவைத்தார், அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எதுவுமே சேர்த்து வைத்து கொள்ளாமல் .. :).... சரி சொன்னார்கள் இதை எங்கள் இருவரின் மனம் நோகாமல் சொல்லி இருக்கலாம்.. வடுக்களாக பதிந்து இருக்காது... :(

ம்ம்..இப்படிப்பட்ட மனிதர்கள் தான் கொடுக்கிறார்கள் மன உறுதியையும், போராடக்கூடிய எண்ணத்தையும். வாழ்க்கையின் தோல்விகள் எல்லாவற்றையும் வெற்றியாக்க வைராக்கியத்தையும். இப்படிப்பட்ட வார்த்தைகள் எனக்கு இன்னமும் பயன்படுகிறது. :) :):) அவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாக எப்போதும் இருக்க வேண்டும் என்னுடைய இந்த வடுங்களின் ரணங்கள் அவர்களை எதுவும் செய்து விடக்கூடாது கடவுளே என்று நான் பல சமயங்களில் நினைப்பதும் உண்டு.

தலைப்புக்கு வருகிறேன். ! .குழந்தைகள் குழந்தைகள் தான் .... வசதி இல்லாதவர்களாக இருக்கட்டும், வேலை செய்பவர்களாக இருக்கட்டும், தாய் தகப்பன் இல்லாதவர்களாக இருக்கட்டும், நொண்டி முடமாக இருக்கட்டும்.. ..குழந்தைகள் குழந்தைகள் தான். .அவர்களின் மனம் நோகும் படி பாரபட்சமாக நடந்துக்கொள்ளாதீர்கள்... வடுக்களை உண்டாக்காதீர்கள்..

அணில் குட்டி அனிதா:- ஓ.. அப்ப ஏதோ ஒரு அப்பாவி தப்பிட்டாருன்னு சொல்லுங்க... .. கவி கிட்ட மாட்டி இருந்தஆஆஆ? வயசானவர்னு வேற சொல்றீங்க. .அய்யோ பாவம் அவர் கதி........ :( செம லக்கி அவரு, தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிடுச்சி'அவருக்கு...... !! :)

பீட்டர் தாத்ஸ்:- Children need love, especially when they do not deserve it. ~Harold Hulbert