நாத்தனார் ' இந்த போஸ்ட் வீட்டுல ரொம்ப முக்கியமான போஸ்ட். அதுவும் அண்ணனுக்கோ தம்பிக்கோ திருமணம் நடக்கும் போதே இவங்களோட முக்கியத்துவம் என்னன்னு தெரிஞ்சிடும். திருமணத்தன்று விளக்கு எடுத்து இவர்கள் முன்னால் நடக்க மாப்பிள்ளையும் பெண்ணும் பின்னால் மணப்பந்தலை சுற்றி வருவார்கள். அப்புறம் வீட்டிற்கு இந்த புது பெண் வந்தவுடன் இவர்கள் அந்த வீட்டிற்கு எத்தனை முக்கியமானவர்கள் என்று நிரூபிக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். மாமியார் மாமனார், கணவரின் சொந்தங்கள் அனைத்தும் அந்த புதுபெண் நாத்தனாரை எப்படி கவனிக்கவேண்டும் என்றும் சொல்லி தருவார்கள்....

மாமியார்கள் தான் வில்லிகள் என்றால் நாத்தனார்கள் பேக் கிரவுண்டு (back ground) வில்லிகள். நேரடியாக தொல்லை தரமுடியாவிட்டாலும் (பல வீடுகளில் திருமணம் ஆகி சென்றிருப்பார்கள்) மாமியாரை எவ்வளவு ஏற்றி விட முடியுமோ தொலைபேசி வழியாகவே ஏற்றி விட்டு பிரச்சனையை உண்டாக்குவார்கள். மாமியாருக்கு தெரியாத பாயிண்ட்ஸ் எல்லாம் இவர்கள் தான் சொல்லி தருவார்கள். இது தவிர்த்து தீபாவளி, பொங்கல், லொட்டு லொசுக்கு என்று எல்லா விஷேஷங்களுக்கும் இவர்களுக்கு பிறந்தவீட்டு சீர் செய்ய வேண்டும். பலகாரம், துணி மணி என்று காலம் முழுதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் போதும், என் அண்ணன் இவளை கல்யாணம் செய்து கொ(ல்)ள்கிறவரை எனக்கு எல்லாம் செய்தான், இவள் வந்த பிறகு எனக்கு எதையுமே செய்யவதில்லை என்று புலம்பி பிரச்சனையை உண்டாக்கிவிடுவார்கள்.

சரி நம்ம கதைக்கு வருவோம், எனக்கு ஒரு நாத்தனார், "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே..." என்னை பெண் பார்த்த அன்றைக்கு, என்னிடம் வந்து "உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன் நெற்றி ரொம்ப அழகாக இருக்குன்னு சொன்னாங்க" (சரி விடுங்க விடுங்க ஏதோ சொல்லிட்டாங்க...!) நான் ஒரு புன்முறுவலோடு நிறுத்திக்கொண்டேன். திருமணம் ஆனா பிறகும் இவர்களிடமிருந்து இருந்து ஒரு சத்தமும் இல்லை. ரொம்ப அன்பாக இருந்தார்கள். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் திருமணத்திற்கு அடுத்த நாள் "நீ என்னை அண்ணி' ன்னு கூப்பிடுன்னு சொல்லிட்டாங்க.. .. போக போக இவங்க அன்பில நான் நனைய ஆரம்பிச்சி.. என் அன்பில அவங்க நனைய ஆரம்பிச்சி.. .நான் இல்லாமல் அவங்க இல்ல அவங்க இல்லாமல் நான் இல்லைன்னு ஒரு ஸ்டேஜ்’க்கு வந்துட்டோம். அது எப்படின்னு நீங்க எல்லாம் என்னை கேட்பீங்கன்னு தெரிஞ்சி தான் ஒரு உதாரணத்தோட இங்க வந்து இருக்கேன்..

மாமியார் வீட்டுக்கு செல்வது எப்போதோ ஒரு தரம், வீட்டு விஷேஷம், திருமணங்கள் இப்படி ஏதாவது இருந்தால் தான், இதில் நான் வேலை செய்கிறேன் என்று பாதி நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் தப்பித்துவிடுவேன் என்பது வேறு விஷயம். இப்படி போகும் போது எல்லாம், அங்கு நான் தேடுவது என் நாத்தனாரை தான்.. அன்பை பொழியன்னு நீங்க தப்பா நினைச்சுகாதீங்க, உட்கார அவங்களை விட்டா நல்ல இடம் கிடைக்காது.

சும்மா.. மெத்து மெத்துன்னு, கும்முன்னு, வீட்டு சோபா செட் எல்லாம் கெட்டுச்சி போங்க..! அவ்ளோ சூப்பரா உருண்டையா ரொம்ப ஸாப்ட்டா வேற இருப்பாங்க..கீழ படத்துல இருக்கிற சோபா மாதிரியே...இருப்பாங்க..ஹி ஹி..:)


அதனால அவங்க மடியில் உட்கார்ந்துகிட்டா நல்லா செளகரியமாக இருக்கும், நல்லா ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும். அப்படியே அவங்களை கொஞ்சிக்கலாம். அவங்களும் நான் போய் மடியில் உட்கார்ந்தபிறகும் கண்டுக்கவே மாட்டாங்க வாம்மா’ன்னு கூப்பிட்டு உட்கார வச்சிக்குவாங்க.

"இதுல டென்ஷன் ஆகறது என் கணவர் தான்.. “ஏண்டி உனக்கு அறிவில்ல (அது இருந்து இருந்தா நான் அவரை கல்யாணமே செய்து இருக்க மாட்டேங்கறது வேற விஷயம்) “அவ மேல போயி உக்காரரியே, அவ தாங்க மாட்டாடி.. (பாசமலர்களாம்.. யப்பா என்னா பாசம் என்னா பாசம்!!).. ஏந்திரிடி தனியா தள்ளி உட்காரு“ என்பார்.. நான் கண்டுக்கவே மாட்டேன்.. என்னைக்கு அவர் பேசறத நாம கண்டுக்கிட்டோம்.. இப்ப கண்டுக்கறத்துக்கு! அவங்களும் “விடு...சின்ன பொண்ணு(சரி சரி நீங்க எல்லாம் கூல்’லா இருங்க..) உட்கார்ந்துட்டு போகட்டுமே எனக்கு ஒன்னும் வெயிட்டா இல்லன்னு “ சொல்லுவாங்க.. சரி அவங்கத்தான் சப்போர்டு’ன்னு நினைக்காதீங்க.. உடனே என்னோட மூத்தார் (கணவரின் அண்ணன்), “ஏண்டா சின்னபுள்ளைய (சரி சரி நீங்க எல்லாம் அகையின் கூல்ல்...ஒகே!) எப்ப பார்த்தலும் திட்டிக்கிட்டு இருக்கே” ன்னு ஆரம்பிச்சி.. அது அப்படியே.. ஓரகத்திங்க எல்லார் கிட்டயும் (4 பேரு) ஒரு ரவுண்டு வந்து.. அவங்க பெத்துவச்ச புள்ளைங்க (9 பேரு) கிட்ட எல்லாம் ஒரு ரவுண்டு வந்து.. “தொத்தா உட்காருட்டுமே சித்தப்பா ..அத்தை இருக்க சைஸ்’க்கு இன்னும் இரண்டு பேரு அவங்க மேல உட்காரலாம்” ன்னு சொல்ற வரைக்கும் தொடரும்

ஸ்ஸ்ப்பா.. என் வீட்டுக்காரருக்கு பேச்சு வருமா..? எப்படி வரும்? வராதே.. அண்ணன்கள், அண்ணிங்க, பிள்ளைகள் என்று மிக பெரிய அளவில நமக்கு சப்போர்டு இருக்கும் போது.. வாயா திறக்கமாட்டார். ஆனா. .எனக்கு மட்டும் தெரியும் வீட்டுக்கு வந்த பிறகு.. சங்கு ஊதுவாருன்னு.. சரி அதை அப்புறமா டீல் பண்ணிக்கலாம்..இப்பவே எதுக்கு நினைச்சு டென்ஷன் ஆகனும்..!! நமக்கு இப்ப தேவை ஜம்’ன்னு மெத்து மெத்துன்னு உட்கார ஒரு இடம்.. உட்காந்தோமா.....உருண்டோமான்னு..... இல்லாம கண்டதை யோசிச்சிக்கிட்டு......

நாத்தனார் உறவு என்பது எப்பவும் எல்லாருக்குமே இப்படி இருந்துவிட்டால் பிரச்சனை ஏன் வருகிறது. நிறைய வீடுகளில் நாத்தனார் அண்ணிகளை குறை சொல்லுவதும், திட்டுவதும், இவர்களும் திருப்பி திட்டுவதும் பிரச்சனையே கதி என்று இருப்பார்கள். எனக்கு அருமையான நாத்தனார் கிடைத்திருக்கிறார்கள். அவங்க எப்பவுமே “செம கூல்” ன்னு சொல்லலாம்."கொஞ்சநாள் வாழபோறோம் எல்லாரும் சந்தோஷமாக இருந்துட்டு போகனும்னு சொல்லுவாங்க.. எதுக்கு சண்டை.. ஒருவருக்கு ஒருவர் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுன்னு" ரொம்ப தெளிவா லெக்சர் கொடுப்பாங்க அவங்க இப்படி தத்துவம் எல்லாம் பேசி முடித்ததும், நான் சொல்லுவேன் "இப்படி எதையும் கண்டுக்காம இருந்து இருந்து தான் உருண்டையாக இருக்கீங்க நாங்க எல்லாம் நினைவு தெரிஞ்சி நடந்து வரோம்.. ஆனா, நீங்க மட்டும் உருண்டு உருண்டு வரீங்கன்னு... “. “அடப்போம்மா..நீ வேற, ரொம்ப தான் என்னை புகழறன்னு" வெட்கப்பட்டு (நிஜமாகவே) சிரிப்பாங்க

அட! என் வீட்டுகாரருக்கு இப்படி ஒரு தங்கச்சியா?!!!! ன்னு நினைப்பேன்.. கண்டிப்பா கூல்’லா இருக்க இவங்ககிட்ட தான் கத்துக்கணும்..

அணில் குட்டி அனிதா:-மக்கா மீட்டங் கீட்டிங்னு அம்மணிய யாரும் கூப்பிடாதீங்க..அங்க வந்து யாராவது இப்படி கும்முனு இருந்தா பாத்து உட்காந்தாலும் உட்காந்துடுவாங்க... யாரு என்னான்னு எல்லாம் பாக்க மாட்டாங்க...உஷார்..உஷார்.. அவ்வளவு தான் சொல்ல முடியும்..!! இவிங்களுக்கு இன்னும் மரப்பாச்சி பொம்மை போல இருக்கோம்னு நெனப்பு.. கடவுளேஅம்மணி’க்கு புத்திகொடு..

பீட்டர் தாத்ஸ்:- Man is a knot into which relationships are tied.