கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கஞ்சி, கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள், திருமணம் ஆனப்பிறகு
தோசையும், இட்லியும் செய்ய நானேக்கற்றுக்கொண்டேன். very very delicious healthy food!!

கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை :  கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அதில் கலந்துள்ள கல்நீக்க அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்

கேழ்வரகு அடை:-

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போட்டு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!

கேழ்வரகு தோசை & இட்லி : 

தேவையானப்பொருட்கள் : 
கேழ்வரகு மாவு 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : உளுந்தை வெந்தயம் சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல கிரைண்டரில் அரைத்து, அத்துடன் அடைமாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிமுட்டி இல்லாமல் கேழ்வரகை கரைத்து ஊற்றி உப்புப்போட்டு கரைத்து வைத்துவிடவும். அடுத்தநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி  செய்முறையில் செய்யலாம். தோசைக்கு தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக ஊற்றி கரைத்து ஊற்றலாம்.
இதற்கு தொட்டுக்குள்ள பொட்டுக்கடலை சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

கேழ்வரகு புட்டு:-

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு:-
உப்பு: 3 சிட்டிகை
சர்க்கரை :- தேவையான அளவு
தேங்காய் துருவல் :- தேவையான அளவு

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும்.

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது. 

அணில் குட்டி அனிதா:- ம்ம்க்கும்!!.. யாரும் இவிங்க வீட்டை காண்டாக்ட் பண்ண மாட்டீங்கன்னு, தைரியம்.. ஒரே ஒரு தரம் வூட்டுக்கு ஃபோன போட்டு அம்மணி புள்ளக்கிட்ட இந்த கேப்ப அடையை பத்திகேட்டுப் பாருங்க.. அவரு நீங்க இதப்பத்தி கேட்டதுக்கே உங்களுக்கு ஊதுவாரு சங்கு...!! .கவி பாவம்..ஒரு வாட்டிக்கூட புள்ள சாப்பிடாத அடைய முக்கி முக்கி முடியாம இவிங்களே சாப்பிடுவாங்க... !!

பீட்டர் தாத்ஸ் :- Make [food] simple and let things taste of what they are.