அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவரின் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.

அவர்கள் மறைவுக்கு பிறகு அவர் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர் மேல் இருந்ததை விட அவர் உறவினர்கள் மேல் தான் அதிகமாக இருந்தது.

காரணம், சென்னையில் உள்ள கான்சர் மருத்துவமனைக்கு பல வருடங்களுக்கு முன் செல்ல நேரிட்டது, அங்கு நான் பார்த்த பலர் எல்லாவற்றையுமே அந்த நோயால் இழந்து இருந்ததது அவர்கள் முகத்திலும் உடல் நிலையிலும் தெரியவந்தது. கடவுளே இப்படிப்பட்ட கொடுமையான நோயை எனக்கு கொடுத்துவிடாதே என்று அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டேன். நோயாளிகளுக்கு லேசர் முறையில் தரப்பட்ட சிகிச்சையால் அவர்கள் முகங்களில் கருப்பு அல்லது கரு நீல கலர்களில் கோடுகள். குறிப்பாக வெற்றிலை பாக்கு போடுவதால் வரும் கான்சர் அதிகமானதாக இருந்தது, அதுவும் நான் அங்கு பார்த்தவரையில் ஆந்திராவினை சேர்ந்த அல்லது தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். தலையில் முடி எல்லாம் கொட்டிபோய் மொட்டைத்தலையாகவும், உடல் மெலிந்து ஒற்றை நாடி உருவமாகவும் நிறைய பெண்களை பார்க்க நேரிட்டது.

இப்படி 2-3 நாள் தொடர்ந்து நான் அங்கு சென்றதற்கே அந்த நோயின் பாதிப்பும் அதனால் அவர்கள் படும் அவஸ்த்தையையும் தெரிந்துக்கொண்டேன். ஆனால் அனுராதா அம்மாவின் உடன் இருந்த குடும்பத்தினர் எப்படி அவர் படும் அவஸ்த்தையைப் பார்த்துக்கொண்டு அவரின் பிடிவாததிற்கு துணை போனார்கள்? கடைசி வரை அவர் பிடிவாதத்துடன் இருந்தாரா என தெரியவில்லை. ஆனால் அவரின் பிடிவாதத்தை அவர் உறவினர்கள் நினைத்திருந்தால் பாசத்தால் கண்டிப்பாக கரைத்திருக்கலாம்.

இதற்கு முன்னர் கூட மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல் என்ற பதிவில் பெண்கள் மார்பகங்களை இழந்தால் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் அனுராதா அம்மா ஒன்றும் திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆகி வாழ்க்கையை அனுபவிக்காதவர்கள் இல்லை. தன் வாழ்க்க்கையில் எல்லா கடமைகளையும் முடித்தவர்கள். அவரின் கணவர் மட்டுமே போதும் அவரின் மனதை மாற்றி அறுவை சிகிச்சைக்கு அவரை சம்மதிக்க வைத்திருக்கலாம்.

12- 15 வயது நிரம்பிய, 2 குழந்தைகளை பெற்ற தாய் தன் கற்பப்பையை கூட பிரச்சனை என்றால் எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். மார்பகங்கள் என்பது மிக சாதாரணமான பெண்மையின் அடையாளம் என்றே நான் சொல்லுவேன். குழந்தைக்கு பாலூட்டமட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பெண்ணிற்க்கு தேவையில்லாத ஒரு உறுப்பு, ஆணுக்கு மட்டும் ஆசையை தீர்க்கும் உறுப்பு. மேலும் என்னுடைய பழைய பதிவில் சொன்னது போன்று செயற்க்கை முறையில் மார்பகங்கள் இருப்பதாக பெண்கள் காட்டிக்கொள்ளலாம். அதற்கான நிறைய உள்ளாடைகள் இப்போது வந்துவிட்டன. ஏன் சினிமா நடிகைகளும், டிவி காம்பயர்களும் சாதாரணமாக அவற்றை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அழகுக்கும் பெண்மைக்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், இருக்கிறார்கள். எத்தனை அழகான பெண்கள் (இந்தகாலக்கட்டதில்) தான் பெற்ற குழந்தைக்கு உயிர்பால் கொடுக்கிறார்கள்?.. எனக்கு தெரிந்து இப்போது பெண்களுக்கு அதற்குக்கூட மருந்து மாத்திரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுமே தாய்பாலா? வரவில்லையே! என்று சொல்லுபவர்கள் சதவிகிதம் அதிகமே. அவர்களே கொடுக்க ஆசைப்பட்டாலும் தாய்ப்பால் கிடைக்காமல் பிறந்த 1, 2 நாள் ஆன குழந்தைகள் புட்டி பால் குடிக்கும் மோசமான/கொடுமையான நிலைமைத்தான் இருக்கிறது. இதனுடைய காரணங்களைக்கூட தனிபதிவிடலாம்.

இப்படி இருக்க, அனுராதா அம்மாவோ எல்லா கடமைகளையும் முடித்த வயது முதிர்ந்த ஒரு பெண், அவர்களை கட்டாயப்படுத்தியாவது முதலிலேயே அறுவைசிகிச்சை செய்து இருக்கலாம். எப்படியும் இறப்பு ஆனால் எதற்கு இப்படி கஷ்டப்பட்டு வருத்திக்கொண்டு இறக்கவேண்டும்?. எல்லாம் விதி என்று நினைத்து விட்டுவிடமுடியாமல்... அனுராதா அம்மாவிற்காக இந்த பதிவு...

அணில் குட்டி அனிதா:- கவி நீங்க ஏன் கேன்சர் ஆஸ்பித்திரி போனீங்கன்னு சொல்லவே இல்ல........எதுக்கு யாருக்காவது அட்வைஸ் பண்ண போய் இருப்பீங்க. .சரி சரி எனக்கு தெரியாதா? நீங்க கொடுத்த அட்வைஸ் ல அவங்க கேன்சர் எவ்ளோ பெட்டர்னு நெனச்சி இருப்பாங்க... :(((

பீட்டர் தாத்ஸ் :-Cancer is a word, not a sentence. ~John Diamond