பல காரணங்களுக்காக, திரை விமர்சனம் எந்த படத்திற்கும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். ஆனால் இதை எழுதியே தீர வேண்டும் என தோன்றியது..."அறை எண் 305-கடவுள்" – படம் இன்னும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியில் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.. பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தரக்கூடிய வசனங்கள்….படத்தின் இயக்குனர் தான் வசனகர்த்தாவா என்று தெரியவில்லை, கூகுள்'உதவவில்லை.. எவ்வளவு தேடியும் கிடைத்ததகவல் இயக்குனர் சிம்புதேவன் மட்டுமே. சரி எரிச்சல் தரும் விஷயத்திற்கு வருவோம் –

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கடவுள் – டெல்லிகணேஷ் என்ற கதாபாத்திரத்தை பார்த்து கேட்கும் கேள்விகள் –

1.நீங்கள் ஆள் இல்லாத மலை உச்சிக்கு ஒத்தைஅடி பாதையில் நடந்து போயிருக்கிறீர்களா?
2. நடுகடல் வரை படகு பயணம் செய்து இருக்கிறாயா?
3. ஏழை 10 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறாயா?

கேட்பது மட்டும் இல்லை இது எல்லாம் செய்யாமல் எப்படி உங்கள் வாழ்க்கை நிறைவடைந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி நிறைவு வேறு????

தனிமனிதனின் விருப்பம் என்பது வேறு..ஒருத்தருக்கு பிடித்த ஒரு விஷயம் நிம்மதி, சந்தோஷம், நிறைவு எல்லாம் எப்படி மற்றவருக்கு நிறைவை தரும். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அதனால் பிடிக்காத அல்லது பச்சை நிறம் பற்றி தெரியாத ஒருவரை பார்த்து உனக்கு பச்சை நிறம் பிடிக்கவில்லை (அ) தெரியவில்லை அதனால் உன் வாழ்க்கையில் நீ நிறைவடையவில்லை என்று சொல்ல முடியுமா?... முட்டாள் தனமான ஒரு சிந்தனை என்றே சொல்லலாம்.

மேல் உள்ள மூன்று விஷயங்களுமே செய்யாமல் எத்தனையோ பேர் நிம்மதியோடும், மிக பெரிய சாதனைகள் செய்தும் , சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சில உதாரணங்கள் :-

1. குடும்பம், குழந்தை , கணவன், சமையல் அறை, உறவுகள், டிவி சீரியல்கள், மதிய நேர தூக்கம், கண்ணில் வைக்கும் மை, தினமும் செய்யும் பூஜை, பக்கத்துவீட்டு கதை, புதிதாய் வந்த புடவை டிசைன் மட்டுமே உலகம் சந்தோஷம் என்ற நிறைவுடன் இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போதும்…இதற்கு மேல் தேவையில்லை… இதை முழுமையாக அவர்கள் பெற்றாலே அவர்களின் சந்தோஷத்தை முகத்தில் பார்க்கமுடியும்…..

2. என் நண்பர் ஒருவர் உதவி கேட்கும் போது ரூ.1500/- கொடுத்தார் ஆனால் அவரே கேளிக்கைக்கு ரூ.5000/- மும் அதற்கு மேலும் செலவு செய்யவும் தயாராக இருந்திருக்கிறார், இருக்கிறார். அவரிடம் கேட்பதற்கு முன் நானே என்னை கேட்டு கொண்டு கேள்விகள். அவரின் சம்பாத்தியம் ,அவருக்கு அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உள்ளது…அவரின் சந்தோஷம் – ஏழைக்கு உதவும் போது இருப்பதை விட கேளிக்கைகளில் ஈடுபடும்போது இருக்கிறது.

3. சமீபத்தில் நீயா நானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்த போது ஒரு பெண் தனக்கு ஹை ஹீல்ஸ் அணிவது மிகவும் பிடிக்கும், அதை அணியவிடக்கூடிய, அணிந்தபிறகும் தன்னைவிட உயரம் அதிகம் உள்ள ஒருவரை மணக்க வேண்டும் என்று சொன்னார். மிக சாதாரணமான அல்லது ஆண்களை பொருத்தவரை கேலிக்குறிய, நக்கல் செய்யக்கூடிய ஒரு விஷயமாக இது இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அது தான் சந்தோஷம், நிம்மதி மனதளவில் நிறைவு.

மனநிறைவை தரக்கூடிய எந்த செயலும் அவரவரை பொருத்தவரை வாழ்க்கையின் சாதனையே… வாழ்க்கையின் நிறைவும் கூட….. ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அத்தனையுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனி…….அதையும் தாண்டி ஒருவரை ஏதோ விஷயத்திற்காக பிரகாஷ்ராஜை (கடவுள் கதாபாத்திரம்) போன்று- இதை செய்தால் நீ நிம்மதியாக இருப்பாய், சாதனை புரிவாய், சந்தோஷமாக இருப்பாய், வாழ்க்கையில் நிறைவை பெருவாய் என்று உணர்த்துவாரானால். உணர்த்துபவரின் பங்கு அதில் என்ன என்பதை பார்க்கவேண்டும்…

கேள்விகள் மிக எளிதாக கேட்கமுடியும்…..ஆனால் பதில்………….

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆரம்பிச்சிட்டாங்கய்யா 'தருமி சீவி…ஹோ'..சாரி…டங் ஸ்லிப்ட்… அறிவு ஜீவி…. சரி கவி மேட்டர விடுங்க.. நம்ம பீட்டர் தாத்ஸ் கவி இம்சை தாங்க முடியாம ஓடிட்டாரு.. சோ…நான் கொஞ்சம் தீவிரமா யோசிச்சி…மிஸஸ்.வாசுகி ய இண்ட்ரோ கொடுக்கிறேன் யாருன்னு பாக்கரீங்களா… அதாங்க நம்ம திருவள்ளூஸ்’ ஒயிஃப் வாசுகி இல்ல அவிங்கதான்… …வூட்டுக்காரு எழுதினத உங்களுக்கு தினம் ஒன்னு சொல்லபோறாங்க.. வாசுகி மேடம் யூ ஸ்டார்ட்… ஆல் தி வெரி பெஸ்டூஊஉ…

மிஸஸ். வாசுகி:-
அன்போடு இயந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயந்த தொடர்பு


அன்பு-பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்ற அளவுகடந்த சிறப்பையும் தரும்.

-Of precious soul with bodys flesh and bone, The union yields one fruit, the life of love alone.