சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.

அப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா? பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.

இதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. "அலைபாயுதே" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. "இதயத்தை திருடாதே" பார்த்து, எல்லோரைடமும் "ஓடி போலமா?" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.

சினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.

வியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.

மிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

அதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.

கறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….

அணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….!!

பீட்டர் தாத்ஸ்:- Failure is the opportunity to begin again more intelligently.