எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.

எங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.


இவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.

கூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.

கண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.

அவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.

ஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய்?, மனுஷன் தானே அவர்? பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற?, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.

அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.

எப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.

ஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.

அணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா? ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா?.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. ??!!

பீட்டர் தாத்ஸ் :- We will not know unless we begin.