அணில் "தெம்புடன்" ஆரம்பிச்சி, தனியா போயிடுத்து, எனக்கு கொஞ்சம் நிம்மதியே.. இல்லையென்றால், நடு நடுவே நக்கல் செய்து என்னை எரிச்சல் செய்து கொண்டு இருக்கும்.

இன்று நம்முடன், கேப்பங்கஞ்சி' யை குடிக்க வந்து இருப்பவர், அணிலிடமிருந்து தப்பத்து போன சிவாவே!!.. தப்பித்தவரை தடுத்து நிறுத்தி, கேப்பங்கஞ்சி' க்கு அழைத்து வந்துள்ளேன்.

வாயை புடுங்கற ரவுண்டு:-


கவிதா:- வாங்க சிவா.. எப்படி இருக்கீங்க..?

நல்லா இருக்கேன் கவிதா, அது என்ன வாய புடுங்குற ரவுண்டு.... வாயில் இருந்து வார்த்தைகளை தானே புடுங்குறீங்க. அப்ப அது வார்த்தை புடுங்குற ரவுண்டு தானே!

கவிதா:- உங்களுடைய பதிவில் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி எழுதறீங்க, ரொம்ப சீரியஸான விஷயத்தை கூட சாதாரணமாக சொல்லிடறீங்க..எப்படி இது? குறிப்பா எனக்கு எல்லாம் இப்படி சுட்டு போட்டாலும் வராது

இது நக்கலா, பாராட்டானு எனக்கு தெரியல. எந்த ஒரு விசயத்தையும் ஒழுங்கா எழுதுவது இல்லை, நாய் வாய் வைத்த மாதிரி எல்லாத்திலும் வாய் வைக்குறேன்னு சொல்ல வறீங்க அப்படி தானே? எந்த விசயத்தையும் சீரியஸா எடுத்துப்பது இல்லை, அதான் சாதாரணமாக வந்து விடுகிறது, போல. உங்களுக்கு மட்டும் இல்லை, யாருக்குமே சு(ட்)டு போட்டா வராது. தோணுறதை எழுதுறேன், அதான் என் பதிவுகே ஏதோ சொல்கிறேன் என்று வைத்து உள்ளேன்.

கவிதா:- அடுத்து நகைசுவை, நக்கல்...நான் சொல்லவே வேணாம்.. கலக்கறீங்க.. குறிப்பா.. பதிவை விட பிற பதிவர்களின் எழுத்துக்களுக்கு உங்களின் மறுமொழிகள் நன்றாகவும், நகைசுவையாகவும் உள்ளது.. இதைப்பற்றி-

மகிழ்ச்சிங்க, ஆக என் பதிவுகள் சுமார்னு சொல்லிட்டீங்க. அடுத்தவர்கள் பதிவில் போடும் போது நம் மறுமொழி அப்பதிவரையோ, மற்ற பதிவர்களையோ ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம்.

கவிதா:- நிறைய பதிவர்களிடம் கேட்ட கேள்வி, இருந்தாலும் உங்களிடம் கேட்டு, கிளர ஆசை. MNC ல வேலை செய்கிற நான் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதற்கு சரியான காரணத்தை பிறகு சொல்லுகிறேன். கலாம் அவர்கள் இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்று பெரும் நம்பிக்கையில் இருக்கிறார், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கை கனவுகளோ படித்துமுடித்தவுடன் வெளிநாடு சென்று விட வேண்டும் என்பதே.. ஏன்? பணம் சம்பாதிக்க என்ற பதிலை தவிர வேறு சொல்லுங்கள். பணம் சம்பாதிக்க இங்கேயே நிறைய வழிகள் உள்ளன. (நேர்மையாக)

நீங்க என்ன காரணம் வச்சு இருக்கீங்கனு எனக்கு தெரியல. சொல்லுங்க பாக்கலாம். சரியா நேரடியாகவே பேசலாம்.
நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு போவதால் இந்தியாவிற்கு நட்டமா, லாபமா சொல்லுங்க? நட்டம் இல்லை என்று கூற வில்லை. அந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக லாபம் வருகிறது என்பது தான் உண்மை. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்த போது அதை தைரியமாக எதிர்த்த நிக்கும் துணிவை கொடுத்தது என். ஆர். ஐ. களை நம்பி தான். சிம்பிள் லாஜிக், உலகத்தில் இருக்குற அத்தனை கம்பெனியும் இந்தியாவில் தொழில் தொடங்க விட்டாச்சு. அவர்களுக்கு நம் மக்கள் உழைத்து கொடுத்து காசாக்கி அதை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட நாங்க இங்க இருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம். மருத்துவம், விஞ்ஞானிகள் பெரும் அளவில் வெளியெறுவது சிறிது வருத்தமான விசயம் தான். அதே போல பெரும்பாலோனார் சூழ்நிலையின் காரணமாக அங்கே தங்கி விடுவதிலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறுகின்றது, நம் இளைஞர்கள் வெளிநாடு வாய்ப்புகளை மறுக்க தொடங்கி விட்டார்கள். அவ்வளவு ஏன் ஆன் சைட்டை மறுக்கும் நண்பர்கள் எனக்கு பலர் இருக்காங்க. நான் போனதுக்கு காரணம் என் குடும்பத்தின் நிலை போதுமான அளவில் இருந்தாலும் என் ஜெனேசரனில் இன்னும் ஒரு அளவு மேலே உயர்த்த வேண்டும் என்ற சுயநலத்தால் தான். எனக்கு இருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதற்குகான பொருளையும், அனுபவத்தையும் சேர்க்கவும் தான். அங்கு நம் மக்கம் போவதற்கு 90% பணம் என்பது தான் துணிவு. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எங்கு இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள், இந்தியாவை பற்றி தான் எங்கள் எண்ணம் இருக்கும். விரிவாக பேச வேண்டிய விசயம், பேசலாம் எதிர்காலத்தில்.

கவிதா:- பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களுக்கு வாழ்த்துக்களும், தனி பதிவும் போட்ட வெகு சில தோழர்களில் நீங்களும் ஒருவர். ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?

அப்படி எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் பதிவு போட எண்ணம் தோன்றிய காரணத்தால் போட்டு இருக்கலாம். எனக்கு இது மாதிரி வகைப்படுத்தி எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாது. இப்படி போட்டுமே ஆண்கள் என்னும் மிருகம், MCP எல்லாம் சொல்லுறாங்க, போடலைனா என் நிலைமை ரொம்ப மோசம் தான் போல்.

கவிதா:- மனதை நடுங்க வைத்த சுனாமி, நாகை மாவட்டம் அதிகபட்சமாக தாக்கப்பட்டது, நாகை மாவட்ட இளைஞனாக வங்காள விரிகுடாவை திட்டியதை தவிர உங்களின் பங்களிப்பாக ஏதாவது செய்தீர்களா?

வங்காள விரிகுடாவை திட்டினேனா? கிடையவே கிடையாது, கோபம் ஏற்பட வில்லை, வருத்தம் உண்டு, உன்னையே எல்லாம் என்று இருந்தவர்களை உன்னால் எப்படி அழிக்க முடிகின்றது என்ற வருத்தம் தான். இந்த இயற்கையின் பேரழிவுக்கு ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்ததும் உண்டு.

பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதா ஒன்னும் இல்லங்க. சுனாமி ஏற்பட்ட அன்றும், பிறகும் சுமார் 70 % மேல் மக்கள் ஊரை காலி செய்து போன போதும் என்ன ஆனாலும் இங்கு தான் என்று உறுதியாக அங்கு தங்கியதை சொல்லாம். முதலில் சுயநலத்துடன் நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆக வில்லை என்று தெளிவான பிறகு நண்பர்கள் நல்லா இருக்கார்களா என்று பார்க்க விரைந்தோம். சில நண்பர்களுக்கு உதவினோம் பணத்தால், உடையால், உணவால், மனத்தால், பொருளால். உதவிகள், ராணுவம் அனைத்தும் விரைவில் வந்ததால் எங்கள் உதவி உயிர் நீத்தோர் உடல்களை அகற்ற அவ்வளவாக தேவைப்பட வில்லை. வெளி ஊர், மாநிலம், நாடு போன்ற இடங்களில் வந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சரியான தகவல், போக வேண்டிய இடத்திற்கு உதவி, தங்க உதவி, வரும் பொருள் உதவிகளை கலெக்டர், டி.ஆர்.ஒ போன்ற அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரியான இடத்தில் சேர்ப்பது போன்ற பங்களிப்பை மற்றும் தான் வழங்க முடிந்தது. வெளி நண்பர்கள் என்னை தொடர்புக் கொண்டு உதவி புரிய முன்வந்ததும் தேவைக்கு அதிகமாக நாகைக்கு உதவி வந்து சேர்ந்ததால் முதல்வர் நிவாரண நிதிக்கு திசை திருப்பி விட்டேன். பதற்றம், மனதளவில் ஏற்பட்ட அழுத்தம், தெளிவு இல்லாமை போன்றவற்றால் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் உண்டு.

கவிதா:- தமிழ்மணம், நாம் எல்லோரும் நண்பர்களாக ஆன இடம், ஆனால் அதிகமான அரசியல் சாதி, மத சண்டைகள், பெண்களை குறிவைத்து அசிங்கப்டுத்தும் ஒரு கும்பல், ஒருவரின் எழுத்தையும், சிந்தனையையும் முடிந்தவரை விமர்சனம் செய்யும் பதிவுகள் அதிகமாக உள்ளன. மாற்றம் வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒன்னும் பெரிதாக செய்ய வேண்டாம், கண்டு கொள்ளாமல் இருங்கள், நேரமும், பொறுமையும் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்கள் சொன்னவர்கள் பற்றி ஒன்றே ஒன்று தான் - அவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. த.ம. தற்சமயம் மேற்கொண்டு இருக்கும், சில நடவடிக்கைகள் பயன் தரும் என்று எண்ணுகிறேன்.

கவிதா:- திரைவிமர்சனம் நிறைய எழுதறீங்க. தேவையா?..

தேவை, தேவையில்லை அப்படினு பகுத்தறிய ஆரம்பித்தால் நான் எல்லாம் பதிவே போட முடியாது. நான் பெரும்பாலும் நல்ல தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது இல்லை. நல்ல படம் வருதா என்று கேள்வி எழுப்பக் கூடாது. மொழி போன்ற நடுத்தர வகைப் படங்களையே தலையில் வைத்து கொண்டாடும் நிலைமையில் இருக்கிறோம், சரி இதை அப்பாலிக்கா பாக்கலாம். நான் பார்த்து நொந்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி வருகிறேன். நிறையாவா போட்டு இருக்கேன்? தமிழ் படங்களுக்கு ஒரு 4 விமர்சன பதிவு எழுதி இருக்கேன், ஒரு பதிவு ஆங்கில திரைப்படங்களுக்காக விமர்சனம் எழுதி இருக்கேன், அம்புட்டு தாங்க. என்ன பண்ணுறது, சினிமாவை கண்டே வளர்ந்த மற்றும் ஒரு தமிழன் தானே நானும். இருந்தாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முயல்கின்றேன்.

கவிதா:- மொக்கை பதிவுகள் எழுதுவதோடு இல்லாமல், அனானிகளை அவிழ்த்து விட்டு ஆட்டம் போடும் பதிவர்களுக்கு உங்களின் நல்ல /சிறந்த ஆலோசனைகள் சில-

மொக்கை பதிவு என்பது அது ஒவ்வொரு பார்வையாளர்களின் பார்வை பொறுத்து உள்ளது. பதிவு போடுவது அவர் அவர்கள் விருப்பம், இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. மொக்கை பதிவை ரசிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. நானே ஒரு மொக்கை தானே! எல்லாரும் சீரியஸ் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டால் போர் அடிக்கும் பாருங்க.

அனானிகளை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை. சில சமயங்களில் அவர்கள் கமெண்ட் ரொம்ப அருமையாக இருக்கும். "அட" போட வைக்கும் ஆனால் இதையே அவர்களின் பெயர் போட்டு போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் அனானி ஆட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.

கவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்?

இதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.

கவிதா:- மொழி’ (திரைப்படம் இல்லை) பற்றிய உங்களின் சிந்தனை மிக குறுகியதாக இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டை தவர இந்தி, பிற மாநிலங்களில் ஒரு பாடமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தான் இந்திய மொழிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை படிக்காமல், அடுத்த நாட்டுகாரின் மொழியான ஆங்கிலத்தை படித்து அதை வைத்து பிற மாநிலங்களிலும், பிற நாட்டிலும் காலம் கடத்துகிறோம். இது சரியா? இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு?.

உண்மை, ரொம்பவே குறுகியது தான். காரணம் பெரிசா ஏதும் இல்லை, ஆர்வம் இல்லை, அம்புட்டு தான். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதை என் பலவீனமாக காட்ட முற்பட்டால் அதற்கு நான் ஆள் கிடையாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அப்படினு ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் முயற்சி ரொம்ப நல்லாவே நடக்குது, இது தான் உண்மை என்று எண்ணம் ஏற்கனவே பெரும்பாலான வட இந்தியர்களுக்கு வந்து விட்டது. ஆனால் என்னை யார் கேட்டாலும் சலிக்காமல் அது உண்மை இல்லை என்று சொல்லுவேன். நீங்க எதை வைத்து பொதுவான மொழி என்று சொல்லுறீங்க, பொதுவாக ஆக்க முயற்சி எடுக்கும் மொழியாக வேண்டுமனால் கூறுங்கள். ஒரு மொழி வளர அடுத்த மொழியை அழிக்க கூடாது, ஆனால் இந்தியின் வளர்ச்சியை எடுத்துப் பார்த்தால் அதனால் அழிவுண்ட, அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கும் மொழிகள் அனேகம். இந்தியை தமிழகத்தில் எதிர்க்க காரணம், அந்த மொழியை செலுத்த முயலாமல், திணிக்க முயன்றது தான். திணிக்க முயன்றால் திமிற தான் தோன்றும், அது தான் நடந்து உள்ளது நம் தமிழகத்தில். பின் இதை அரசியல் ஆக்கி ஒரு விளையாட்டு விளையாடி விட்டார்கள் நம் வியாதிகள்.

வெள்ளைக்காரன் விட்டு போன கட்டமைப்பு போன்ற பலவற்றை பயன்படுத்தும் போது அந்நிய தேசத்தவரால் உருவாக்கப்பட்டதை நாம் உபயோகப்படுத்துகிறோமே என்று நினைத்தது உண்டா? அது போல தாங்க இதுவும். அந்த மொழியின் தேவை நமக்கு இருந்தது, தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். அவ்வளவு தான். அதும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து எல்லா நாட்டிலும் காலம் தள்ள முடியாது, ஆங்கிலமே புரியாத பல நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் நமக்கு சைக்கை பாஷை தான்.

கவிதா:- மனிதர்களை கடவுளாக ஆக்கும் நம்மை பற்றி- (நடிகர்கள், அரசியல் தலைவர், தலைவிகள், சாமியார்கள்..)

எனக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை உள்ளவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சொல்லி தான் ஆகனும் என்றால் - " போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்கய்யா..." (அது சாமியார்களுக்கு).

கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரையே கடவுளாக கும்பிடும் பகுத்தறிவு கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் நானும், ப்ரீயா விடுங்க.... ஆனால் என் லிஸ்டல நடிகர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், தலைவிகள் சத்தியமா இல்லை. நான் சில இடங்களில் ரஜினியை தலைவர் என்று வளித்து இருக்கலாம், அது ஒரு ரசிகன் என்ற முறையில் மட்டுமே அவரை பின்பற்றுபவன் என்று இல்லை.

கவிதா:- சூடானில் பிடித்தது, நாமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தது-

இது வரை அப்படி ஏதும் தோன்றியது இல்லை. எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற நினைத்த விசயங்கள் பல இருக்கு.

கவிதா:- வவாச’ வில் உங்களின் பங்களிப்பும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பயணும் என்ன?

பெரிதாக ஒன்றும் இல்லை.
சங்கத்து சிங்கங்களில் ஒருவன் என்று சொன்னால் பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்படியான விளம்பரம், அன்பான, பண்பான நண்பர்கள்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு

கட்டி வச்சு வேற அடிப்பீங்களா, தாங்குவேனா?

1. பிடித்த பெண் பதிவர்கள்

ஒரு லிஸ்டே இருக்கு, அவை எல்லாம் நான் படிக்கும் பெண் பதிவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ரசிக்க வைத்து உள்ளார்கள்.(தோடா, சினிமா ஹிரோயின் பேட்டி மாதிரி பதில் சொல்ல வேண்டியாதா இருக்கு, என்ன பண்றது, இல்லாட்டி வம்பாயிடுமே)

2. உங்களின் ‘அப்பா” என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது

எளிமை, பிடிவாதம், கோவம், அமைதி

3. உங்களுக்கு பிடித்த உங்களின் பதிவுகள்

எல்லாமே நான் பெற்றெடுத்த முத்துக்கள் தானே என்று சத்தியமா சொல்ல மாட்டேன். ஒசியில விளம்பரம் கொடுக்க சொல்லுறீங்க, விடுவேனா, இதோ

தேசியம் - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_15.html
அறிவியல் - http://tsivaram.blogspot.com/2006/11/1.html
அழகுக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html
மொக்கைக்கு -http://tsivaram.blogspot.com/2006/07/blog-post_20.html
சுவைக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_02.html
பக்தி - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_04.html
சந்து கேப்ல சிந்து பாடுறது - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_24.html
குசும்புக்கு - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_07.html,
நக்கலுக்கு - http://tsivaram.blogspot.com/2006/10/blog-post_09.html,
கோபத்திற்கு - http://tsivaram.blogspot.com/2006/05/blog-post.html
லொள்ளுக்கு - http://tsivaram.blogspot.com/2007/02/blog-post_20.html

4. பதிவுலகில் கற்றுக்கொண்டவை

எங்கு போனாலும் நாம் திருந்த மாட்டோம், அது போக, தமிழில் சரளமாக டைப் பண்ண, பலவற்றை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வைத்தது, யோசிக்க வைத்தது.

5. உங்களின் தோழி’கள் பற்றி

உரிமையுடன் கடிந்து கொள்பவர்கள், எதையும் பகிர்ந்து கொள்பவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள், எனக்காக பலவற்றை செய்தவர்கள், செய்பவர்கள்.

6. வ.வா.ச சிங்கங்களை வரிசைப்படுத்துங்கள்

ஆங்கில அகர வரிசைப்படி

சொந்த பெயர்
பாலாஜி
தேவ்
இளா
சிபி
மோகன்
பாண்டி
ராம்
சிவா

புனை பெயர்
கச்சேரி தேவ்
ஜொள்ளு பாண்டி
கைப்புள்ள மோகன்
நாகை சிவா
ராயல் ராம்
தளபதி சிபி
வெட்டி பாலாஜி
விவசாயி இளா

வார்த்தைகளில்,
பாலாஜி - சுட்டிப்பயல்,
தேவ் - பக்குவமான ஒருங்கிணைப்பாளர்,
இளா - இன்"சீனியர்",
மோகன் - மெத்த படித்த மேதை,
பாண்டி - எனக்காக ஸ்கூல்களை விட்டு கொடுத்து கல்லூரி வாசலுக்கு மாறிய பண்பாளர்,
சிபி - லொள்ளாணந்தா,
ராம் - சிணுங்கும் மதுரை தங்கம்.

7. உங்கள் சமையலில் உங்களுக்கு பிடித்தது /மற்றவர்களுக்கு பிடித்ததும் சொல்லலாம்

எனக்கு பிடித்தது இறா வறுவல், சிக்கன் 65, உ.கி. பொடிமாஸ், ரசம் இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.

மற்றவர்களுக்கு - இந்தியாவில் நான் சிக்கன் 65வும், இறாலும் தான் செய்வேன். இங்கன எதை சமைத்து போட்டாலும் கண்ணீர் மல்க(காரத்தினால்) நல்லா இருக்குனு சொல்லுறாங்க, ரொம்ப காய்ந்து போய் கிடக்குறாங்க போல. அதிலும் முட்டை குழம்பு, சாம்பார்னா பாத்திரத்தை மண்டிட்டு தான் மறு வேலை பாக்குறாங்க.

8. சாப்பாட்டை தவிர, வேறு எந்த விஷயங்களுக்கு, உங்கள் அம்மாவின் அருகாமை வேண்டும் என நினைப்பீர்கள்

திட்டுவதற்கு, மடியில் தலை வைத்து படுக்க, டிவி சீரியல்களை மாற்ற சண்டை போடுவதற்கு...

9. கலாம் அவர்களின் - பொன்மொழிகளில் உங்களுக்கு பிடித்தது

அவரின் பொன்மொழிகள் அனைத்தையும் நான் படித்தது இல்லை. அக்னி சிறகுகளில் இருந்து சில வைர வரிகளை வைத்து ஒரு பதிவு போட்டு இருக்கேன், அது http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html

*** படித்த வரையில் தோல்விகளுக்கிடையே தான் வெற்றி இருக்கிறது.
குழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.
பிரச்சனைகளுக்கிடையே தான் சத்தியம் இருக்கிறது.

*** எதை செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களைச் சுற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.

10. ஜார்ஜ் புஷ்- ஐ நேராக பார்க்க நேர்ந்தால் என்ன கேட்க நினைப்பீர்கள்.?

கடன் கூட கேட்கலாம், ஆனா அதை விட முக்கியமான விசயம் இருப்பதால்,

உங்க பொண்ணுக்கு எப்ப மாப்பிள்ளை பாக்க போறீங்க?

இப்பனா நான் ரெடி
கொஞ்சம் லேட்டானா வெட்டி ரெடி
ரொம்ப லேட்டான பங்காளி ஷாம் ரெடி
கொஞ்சம் கன்சீடர் பண்ணுங்கனு கேட்ப்பேன்.

அட என்னங்க நீங்க, அவரு போய் நான் பாப்பதா, அந்த அளவுக்கு நான் இன்னும் மோசம் ஆகல, நாங்க எல்லாம் பாக்கெட்டில் நாலணா இருந்தாலே பெரிய ரவுடி, எங்கிட்ட போய்... போங்க போய் பொழப்ப பாருங்க....

கவிதா..! - இந்த கேத்து தான் ஆம்பிளைங்க சொத்தே!!!!!