முக்கிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங்களை இப்போது மிக வேகமாக அகற்றி வருகிறார்கள். அதுவும் மரங்கள் என்றால் இவை எல்லாம் வானுயர்ந்த மரங்கள். மழை, வெயில் இரண்டு காலங்களிலும் நமக்கு உதவுபவை.

ராஜ்பவன் அருகில், சர்தார் வல்லபாய் சாலையில் உள்ள மரங்கள் மிக வேகமாக அகற்றப்பட்டு விட்டன. நேற்று பார்த்த மரங்களை இன்று பார்க்க முடியாது..அவை இருந்த இடங்கள் வெறும் சிமெண்ட் பூசப்பட்ட சாலைகளாக மாறிவிடுகின்றன.

வெயில் காலங்களில் அந்த சாலையில் செல்லும் போது மிகவும் குளுமையாக இருக்கும். ஏன் சிறுது நேரம் வெயிலின் தாக்கத்திற்கு நின்று கூட போகலாம், மழை காலத்திலும் சரி இந்த மரங்களுக்கு கீழ் நின்று விட்டு செல்பவர்கள் பலர்.

ஹால்டா சிக்னலில் இருந்து, மத்யகைலாஷ் வரை உள்ள மரங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டுக்கொண்டே வருகின்றன. அதில் ஹால்டா’ அருகில் இருந்த எந்த ஒரு மரமும், சாலைக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாகத்தான் இருந்தன. அவற்றை ஏன் அகற்றினார்கள் என்ற கேள்விக்கு விடை இன்னமும் தெரியவில்லை. அதே போல், கோட்டூர் புரம் சாலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு விட்டன. அந்த மரங்களால் போக்குவரத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது.

இந்த மரங்கள் அத்தனையும் அத்தனை உயரமாகவும், பருமனாகவும் வளர எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை..ஆண்டுகள் 100 களை தாண்டி க்கூட இருக்கலாம். இப்படி வளர்ந்த மரங்களை வெகு எளிதாக போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் கூட ஏன் அகற்றுகிறார்கள் என்பது புரியவில்லை.

2000 ஆம் ஆண்டு வேளச்சேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, அங்கு சாலையில் சில வேப்பமர கன்றுகளை நட்டு, இந்த வருடம், 2007 ல் அந்த மரங்கள் தெருவிளக்கை தொடும் அளவிற்கு உயரமாகி இருப்பினும், இன்னமும் அதன் பருமன் நான் ஒரு கையால் பிடிக்கும் அளவிற்கு தான் வளர்ந்திருக்கிறது. அதை பாதுகாத்து வளர்ப்பதற்க்குள் படாத பாடு பட்டுவிட்டேன் எனலாம். அது வளர்ந்து வேர் வீட்டு உள்ளே புகுந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து அவர்கள் தலையில் விழுந்து விடும் என்று அதை பிடுங்கி போட்ட அக்கம் பக்கத்தினரும் உண்டு. இன்று அவர்கள் வீட்டு இரு சக்கர வாகனம் இந்த மரங்களுக்கு அடியில் தான் நிறுத்திவிட்டு வருகிறார்கள்.

எங்கள் வீட்டு முன் இருக்கும் மரங்களின் வளர்ச்சியை பார்க்கும் போது, இப்போது வெட்டப்படும் மரங்களின் உயரத்தையும், பருமனையும் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது.. எத்தனை ஆண்டுகளாய் இந்த மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டு இருந்தன இப்படி ஒரே நாளில் செத்து போகவா?..

இப்படி மரங்களை பார்த்து எல்லாம் அழுது கொண்டு இருக்கும் என்னை வீட்டில் மட்டும் இல்லை நண்பர்கள் கூட ஒரு மாதிரியாக தான் பார்க்கிறார்கள். நாட்டில் என்ன என்னவோ பெரிய விஷயங்கள் இருக்க ஒரு சாதாரண மரத்திற்காக இவள் அழுகிறாளே, புலம்புகிறாளே என்று நினைக்கிறார்கள்.

ஜி.என்.செட்டி சாலையில் மரங்களை அகற்றும் போது அங்கு இருந்த குழந்தைகள் அந்த மரங்களை கட்டியணைத்து வெட்ட விடாமல் செய்தார்களாம். அந்த குழந்தைகளை போன்று தான் எனக்கும் தோன்றும்..ஆனால் இப்படி தொலைவில் இருந்து அழும் போதே என்னை ஒரு மாதிரி பார்க்கும் ஆட்கள், மரத்தை கட்டிக்கொண்டு, அழுது வெட்டவிடாமல் செய்தால்..நிச்சயம் ஆஸ்பித்திரியில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்..

அணில் குட்டி அனிதா:- வாவ்..!! கவி..சூப்பர் ஐடியாவா இருக்கு.!! சொல்லவே இல்ல?!! .ஆமா நீங்க எப்ப எந்த மரத்தை கட்டிக்க போறீங்கன்னு சொல்லுங்க..ரெடியா நான் ஆம்புலன்ஸ்’ ஓட காத்துக்கிட்டு இருக்கேன்..சரியா..

ம்ம்.. நீங்க எப்பவோ ஆஸ்பித்திரியில இருக்க வேண்டியவங்க.... நாட்டுல நடமாடிக்கிட்டு இருக்கீங்க என்ன செய்யறது.. எனக்கு தெரிஞ்ச.. இந்த விஷயம் ஊரு உலகத்துக்கு தெரியனும்னா.. நீங்க கண்டிப்பா ஏதாவது மரத்தை போய் கட்டிக்கோங்க..ப்ளீஸ்..............

பீட்டர் தாத்ஸ் :-Winners can tell you, where they are going, what they plan to do along the way and who will be sharing the adventure with them.