எரிந்து போன என் சான்றிதழ்கள்
நண்பர் சீனு எழுதி உள்ள இந்த “சாம்பளாக கடவாய்” படித்தவுடன். மனதுக்குள் மறந்துபோன என் வீட்டு தீ விபத்து ஞாபகம் வந்து பகீர் என்றது. கடந்துவந்த பாதையின் வலிகள் இவை..மறக்கமுடியாமல் இன்னமும்.......
எங்களுது சொந்த ஊரில் எங்களுடைய வீடு 2 ஆவது மாடியில் என்னுடைய தாத்தாவின் விருப்பதிற்கு இணங்க குடில் குடிலாக போடப்பட்டு வசித்து வந்தோம். அதாவது தாத்தா ரூம் ஒரு குடில், எங்களுக்கு தனி, என் அப்பாவிற்கு தனி, வெளி சமையல் அறை, பூசை அறை அது ஒட்டி ஒரு குடில் என்று விழலால் செய்யப்பட்ட குளு குளு குடில்கள். எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
நான் +2 முடித்து (படிக்க வேண்டும் என்ற வெறியுடன் அல்லவா இருந்தேன்) B.Sc கணிதம் சேரவேண்டும் என்று application fill செய்து கொண்டு இருந்தேன். ஒரு வாரமாக எங்கள் வீட்டில் சேலத்திலிருந்து வந்து இருந்த விருந்தினர் ஆன்ட்டியும் அவர்களின் பிள்ளைகளும் காலையில் தான் திரும்பி ஊருக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டு வெளி சமையல் அறையில் குளிக்க தண்ணீர் சுட வைத்து இருந்தார்கள், ஆனால் நெருப்பை சரியாக அணைக்காமல் போய் விட்டார்கள். வீட்டில் எப்போதும் நான் மட்டும் தனியே தான் இருப்பேன். ஆயா கடைக்கு போய் விட்டார்கள். அண்ணன்கள் எப்போதும் வீடு தங்கமாட்டார்கள்.
ஏதோ வேலையாக வெளியில் சென்ற நான், எங்கள் குடில் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி, ஒரு குடம் தண்ணிர் எடுத்து என்னால் முடிந்த அளவு தூக்கி ஊற்றிப்பார்த்தேன். ஆனால் அது ஆடி மாதம், காற்று பிய்த்து கொண்டு போக தீ அதிகமாக பெருகி எல்லா திசையும் பரவியது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, எங்கள் வீட்டில் கீழ் தளத்தில் 4 குடியிருப்புகள் வாடகைக்கு இருந்தார்கள், மேலே இருந்தபடியே.. எல்லோரையும் கத்தி அழைத்தேன். அவர்களில் யாரோ தீயணைப்பு துறைக்கு சொல்லி வரசொன்னார்கள். அதற்குள் தீ முழுமையாக எல்லா குடில்களுக்கும் பரவியிருந்தது. அன்றைய தினம் காற்றின் மிகுதியால், விழுப்புறம் முழுதும் எங்கள் வீட்டில் எரிந்த சாம்பல்கள் படிவங்களாக எல்லோர் விட்டிலும் படிந்தது எனலாம்.
நான் தனியாக இருந்ததால், அக்கம் பக்கம் இருப்பவர்கள் என்னை உள்ளே செல்ல விடாமல் அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்த தீ எங்களின் வீட்டை குட்டி சுவராக மட்டுமே ஆக்கிவிட்டு சென்றது. விழுப்புரம், விக்கவாண்டி, முண்டியம்பாக்கம் மூன்று இடங்களில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வந்தன. ஆனால் தீயை அவர்கள் அனைத்தது எல்லாமே போன பிறகு தான். மேல் மாடி என்பதால், வீட்டு தென்னைமரங்கள் கூட எரிய ஆரம்பித்தன. பச்சை மரங்கள் கருகிப்போயிருந்தன.
மாற்று துணிக்கூட இல்லாமல் எங்கள் அண்ணன்களுக்கு அவர்களின் நண்பர்கள் உதவினார்கள், எனக்கு என் அத்தை மகளின் உடைகள் வந்தன. பணம்,நகைகள், வெள்ளி பாத்திரங்கள், பட்டு புடவைகள், விலை உயர்ந்த தேக்கு மரப்பொருட்கள் எல்லாமே போனது.
இந்த விபத்தில் மனித சேதம் ஒன்றும் இல்லை என்றாலும் எல்லாமெ போய்விட்டது. கட்டிய துணியுடன், நானும் என் அண்ணன்கள், என் ஆயாவும் நின்றோம். அவ்வளவு அழிந்தும் என் ஆயா என்னை அணைத்து, “ஐயோ..பெண்ணே..கடவுள் என் பக்கம் இருக்கிறார், வீடு எரிவது தெரியாமல் நீ உள்ளிருந்தால், நீ நன்றாக இருக்கும் போதே உன்னை எப்படி கல்யாணம் செய்து கொடுப்பேன் என்று கவலை படுகிறேன். தீக்காயத்துடன் இருந்தால், என்ன செய்வேன்..உன்னை இழந்தால் கூட பெரிய விஷயம் இல்லை.. ஆனால் இந்த உலகம் என்ன பேசியிருக்குமடி.. என்னை காப்பாற்றினான் அந்த கடவுள்” என்று சொன்னது அப்போது எனக்கு விளங்கவில்லை ஆனால் பிறகு விளங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது என் மனநிலை என்று சொல்லலாம். பல வருடங்கள் தூக்கத்தில் அந்த ஆளை விழுங்கும் நெருப்பு ஜுவாலை என் கனவில் வந்து திடுக்கிட்டு கத்தி கொண்டு எழுந்திருப்பேன். இது பல மாதங்கள் தொடர்ந்தது. . எங்கே நெருப்பை பார்த்தாலும் மனதில் ஒரு நடுக்கும் வந்து பயந்துவிடுவேன் அது மட்டும் அல்ல நான் மட்டுமே தனியே இருந்ததால், உறவனிர்களால், ராசியில்லாத பெண், தரித்திரம் என்றேல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டேன். என் திருமணம் ஆகும் வரை அவர்கள் என்னை அவர்கள் அப்படி தான் அழைத்தார்கள். எல்லாவற்றையும் கேட்டு பழக என் மனதை பழக்கிக்கொண்டேன் எனலாம்.
என் படிப்பும் ஒரு வருடம் சான்றிதழ்கள் இல்லாமல் நின்று போனது. அதை வாங்க நான் பட்ட பாடு தனி பதிவே போட வேண்டும். நேர்மை நியாயம் என்று லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று கூறியதால், அவர்கள் என்னை கிட்ட தட்ட மூன்று மாதத்திற்கு மேல் இழுத்தடித்து கொடுத்தார்கள். நானும் பணம் கொடுத்து அந்த வேலையை செய்ய கூடாது என்று விடாபிடியாக நின்று என் சான்றிதழ்களையும், என் அண்ணன்கள் சான்றிதழ்களையும் பெற்றேன். சான்றிதழ்’கள் என்றால் படிப்பு மட்டும் அல்ல, அப்பாவின் இறப்பு, தாத்தாவின் இறப்பு, சொத்து பத்திரம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் போயிற்று.
அணில் குட்டி அனிதா:- ஆஹா, கவி.. நெருப்போட பூந்து விளையாடி இருக்கீங்க போல.. ஆமா.. கல்யாணம் ஆன பிறகு இப்படி ஒன்னும் நடக்கலையா?.. வூட்டுகாரை பத்திரமா இருக்க சொல்லுங்க.. உங்க ராசி அவரை தொத்தி அவருக்கு பிரச்சனையாகிட போகுது.. நீங்க சொல்றீங்களோ இல்லையோ நான் சொல்லி வைக்கிறேன்.. பாவம் மனுஷன்..!!
பீட்டர் தாத்ஸ்:- Participating in the pressures and pleasures of life and keeping one’s own self, leads to true happiness.
Labels:
பழம்-நீ



14 - பார்வையிட்டவர்கள்:
மிகவும் ஒரு மனஅதிர்ச்சி (traumatic) தரும் நிகழ்ச்சிதான். மீண்டுவந்ததும் சுற்றாரின் வீண்பேச்சுக்கள் உங்கள் மன உறுதியை வலுப்படுத்தியதும் உங்கள் தனிமனிதப் பண்பை (personality) பறை சாற்றுகின்றன.
நன்றி மணியன், எனக்கு மன உறுதி அதிகமானது ஒவ்வொரு தோல்வியிலும் நான் விழுந்து விழுந்து எழுந்த போதுதான். ஆனால் சில நேரங்களில் மன வலி தாங்காமல் அழுவேன். வலி போகும் வரை அழும் அழுமூஞ்சி நான்.
// இந்த விபத்தில் மனித சேதம் ஒன்றும் இல்லை என்றாலும் எல்லாமெ போய்விட்டது. //
அதுவல்லவா மிக மிக முக்கியம். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஏனைய எல்லவற்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால், மனித இழப்பை...?
நெஞ்சை உலுக்கும் அனுபவம். அதிலிருந்து மீள வைத்தது உங்கள் மன வைராக்கியம்தான்.
வைசா
கவித்தாக்கா you'r great...
எவ்வளவு காயங்களை இந்த உலகம் உங்களுக்கு கொடுத்திருக்கும். எல்லாத்தையும் தாங்கி கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க.
உண்மையில் உங்களின் மன உறுதியை பாராட்ட வேண்டும்.
காலம் தான் எல்லாவற்றிக்கும் மருந்து.
இனி எல்லாம் நலமே...வாழ்த்துக்கள் :))
//நெஞ்சை உலுக்கும் அனுபவம். அதிலிருந்து மீள வைத்தது உங்கள் மன வைராக்கியம்தான்.//
நன்றி வைசா!. மீண்டு வந்த நான் எவ்வளவு பரவாயில்லை. என்னுடைய ஆயா அந்த வீட்டு எஜமானி, இழந்த பொருட்கள், வீடு எல்லாம் அவர்களின் உழைப்பில் வந்தது. அவர்களை நாங்கள் ஒரு வாரம் கழித்து தான் மாடிக்கு கொண்டு போய் காட்டினோம்.. அவர்கள் அந்த குட்டி சுவரை பார்த்து கதறியது இன்னமும் என் நெஞ்சில் நீங்காத.. வடுவாக இருக்கிறது.....
//இனி எல்லாம் நலமே...வாழ்த்துக்கள் :)) //
நன்றி கோபிநாத். :)))))
எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் சந்திக்காமல் வாழ்ந்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான விசயம்தான்....
உங்கள் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை சோதனைகள்....
இறைவன் துணை நிற்பான்....
//உங்கள் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை சோதனைகள்....
இறைவன் துணை நிற்பான்.... //
ஜி, கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தை நான்.. அதனால் தான் இத்தனையும்..
நன்றி ஜி.. :)))))) பழகிவிட்டால், முள் மெத்தையும் பஞ்சி மெத்தையே..!!
//எனக்கு மன உறுதி அதிகமானது ஒவ்வொரு தோல்வியிலும் நான் விழுந்து விழுந்து எழுந்த போதுதான். //
இதை தோல்வியாவா பாத்தீங்க... ஒரு அனுபவம்(நல்லதோ கெட்டதோ). படிப்பினை கொடுத்த அனுபவமாக தான் எடுத்து இருப்பீங்க நினைக்கிறேன். இது மாதிரி சில விசயங்கள் தாங்க நம் எதிர்காலத்தை நல்லப்படியாக அமைத்துக் கொள்ள தூண்டுகோலாக அமைகின்றது
//இதை தோல்வியாவா பாத்தீங்க... ஒரு அனுபவம்(நல்லதோ கெட்டதோ). படிப்பினை கொடுத்த அனுபவமாக தான் எடுத்து இருப்பீங்க நினைக்கிறேன்.//
நன்றி சிவா, அப்படித்தான் எடுத்துக்கொண்டேன்.. அனுபவம் மட்டுமே நல்ல பாடம் இல்லையா?!!
//எனக்கு மன உறுதி அதிகமானது ஒவ்வொரு தோல்வியிலும் நான் விழுந்து விழுந்து எழுந்த போதுதான்//
ஹ்ம்ம்ம்..இந்த அனுபவம் எனக்கும் உண்டு கவி... காயங்கள் ஏற்படுத்திய வடு இப்பவும் இருக்கு..இருக்கனும்னு பத்திரமா வச்சுட்டு இருக்கேன்.. ஒரு வேளை இந்த உறுதியை ஏற்படுத்ததான் விழ வைத்தானோ என்று தோன்றுகிறது..ஹ்ம்ம்.. வாழ்த்துக்கள் கவி...எனோ மனசு பழைய நினைவுகளுக்கு...ஹ்ம்ம்ம்
//ஹ்ம்ம்ம்..இந்த அனுபவம் எனக்கும் உண்டு கவி... காயங்கள் ஏற்படுத்திய வடு இப்பவும் இருக்கு..இருக்கனும்னு பத்திரமா வச்சுட்டு இருக்கேன்.. ஒரு வேளை இந்த உறுதியை ஏற்படுத்ததான் விழ வைத்தானோ என்று தோன்றுகிறது..ஹ்ம்ம்.. //
மங்கை, உங்கள் பழைய நினைவுகளின் வலியை என்னுடைய பதிவு தூண்டி இருப்பின் மன்னிக்கவும். இந்த பதிவின் நோக்கமே, எந்த பாதிப்பிலிருந்தும் எழுந்து வர நம் மனதை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே.
மனம் வேதனை பட்டிருப்பின் என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.
ஐயோ என்ன கவிதா இது...மன்னிப்பு அது இதுனு... எழுந்து வந்ததுனால தான் இன்னைக்கு உங்க கூட பேசீட்டு இருக்கேன்...:-))...அந்த வலி இருக்கனும் கவி...ஆனா அது என்ன பாதிக்காம பார்த்துக்குறேன்..
அவ்வளவுதான்..
உங்க சாரி எல்லாம் வாபஸ் வாங்கிக்குங்க,,ப்ளீஸ்..:-)))...
சிரிப்பான் போட்டுட்டேன்
//உங்க சாரி எல்லாம் வாபஸ் வாங்கிக்குங்க,,ப்ளீஸ்..:-)))...
சிரிப்பான் போட்டுட்டேன் //
சரிங்க வாங்கிக்கிட்டேன்.. :))))))))))))))))))))))))) போதுமா என்னோட சிரிப்பான்.. :)))))))))
ஐயோ நான் சிரிச்சா..சிபி வந்து ஆச்சிரியப்படுவாங்க.. கவிதாக்கு சிரிப்பு வருதேன்னு...!! :))))))))
Post a Comment