காலையில் வேக வேகமாக எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு, நடுவில் கணவர் (அ) மகனிடம் பிரச்சனை என்றால், அதற்காக அவர்கள் சத்தம் போட கூட நானும் சத்தம் போட்டு BP எல்லோருக்கும் எகிறிபோக வீட்டை விட்டு மூவரும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஸ்கூல், ஆபிஸ்’ க்கு வரும் வழியில்-

மூச்சை கொஞ்சம் நிதானமாக விடுவது, வண்டி சிக்னல்களில் நிற்கும் போது மட்டுமே. டென்ஷனை குறைக்க மூச்சை பெரிதாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்ய முயலுவேன். நம் சென்னை மாநகரில் வாகன புகைக்கு கேட்கவே வேண்டும், நாம் இழுக்காமலேயே உள்ளே போய்விடும். ஆனாலும் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது சிக்னல்களில் மட்டுமே. அப்படியே நிற்கும் வினாடிகளில் அக்கம் பக்கம் நடப்பவையை ஒரு பார்வையிட்டால் குறைந்த டென்ஷன் மின்னல் வேகத்தில் தலைக்கு ஏறும்.

சக மனிதனை மனிதனாக மதிக்காமல், நாயை போல் நடத்தும் சிலர், காருக்குள் சொகுசாக உட்கார்ந்து கொண்டு, அவர்களின் வீட்டு நாயையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, சிக்னலில் நாம் சுற்றி பார்க்கும் நேரம் பார்த்து, அந்த நாய் அதன் எஜமானை நக்கி விளையாடும். நான் பார்க்கிறேன் என்பதற்காக வேண்டும் என்றே அப்படி செய்கிறதோ என்று கூட தோன்றியது. அப்படியே கண்ணை திருப்பி முன் சீட்டில் உள்ள டிரைவரை பார்த்தேன். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி உட்கார்ந்து இருந்தார். சிலை கூட அசையும் ஆனால் இவர்.. எஜமான விசுவாசம், பயம் துளிக்கூட அசைவே இல்லை.

முன் சீட்டில் ஒரு மனிதன், இவரையும் , இவர் நாயையும் தினமும் உயிருடன் வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கிறார், அவரை இப்படி கொஞ்ச வேண்டாம் ஆனால் ஒரு மனிதாக மதிக்கலாம் அல்லவா?

சரி வீட்டிலாவது இந்த உயிர் காக்கும் டிரைவர்கள் சகஜமாக பேசவோ, அவர்களின் வீட்டுக்குள் செல்ல முடிகிறதா?.. நாய் இருக்க வேண்டிய இடத்தில், இவர்கள் நின்று அவரின் சாப்பாட்டையும் தேவைகளையும் நிறைவேற்றி க்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது பணக்காரர்கள் வீட்டில் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் நடமாட ஒரு வரைமுறை வைத்து இருப்பார்கள். தோட்டத்து பக்கம் சென்றால் சமையல் காரர், இவர்களுக்கு சாப்பாடு கொடுப்பார். வெளியில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். கையை கட்டி, குனிந்து நின்று பேசுவார்கள். காருக்குள் படுத்து தூங்குவார்கள்.

ஆனால் பணக்காரர் வீட்டு நாய் என்னவோ அவர்களை நக்கும், ஒவ்வாத சாப்பாடு சாப்பிட்டு சில நேரம் வீட்டுக்குள்ளேயே கக்கும், இருந்தாலும் அதை கட்டி அனைத்து முத்தமிட்டு ரசிப்பார்கள். அதுவும் இவர்களை நக்கி தன் சந்தோஷத்தை வெளிக்காட்டும்.

பணக்கார நண்பர்களே எல்லாரும் ஓடி வந்து சண்டைக்கு நிற்காதீர்கள், நாய் எந்த பணக்காரை நக்குகிறதோ, எந்த பணக்காரர் அவர் வீட்டு வேலையாளை நாயை போல் நடத்துகிறாரோ..அவருக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும்.

அணில் குட்டி அனிதா:- அட கவி?.. என்னாது இது..அங்க தொட்டு இங்க தொட்டு அனிமல்ஸ் கிட்ட வந்துட்டீங்க.. மேனகா காந்திக்கு போன் பண்ணனுமா?.. அவங்க வீட்டு நாய் அவங்க ஏதோ செய்துட்டு போறாங்க.. உங்களுக்கு வேணுமான்னா நீங்களும் ஒரு நாய் வளர்த்துகோங்க.. அதை நக்க விடுங்க..அதை வுட்டுட்டு சும்மா அது அதுக்கும் டென்ஷன் ஆயிக்கிட்டு, ஹய்யோ..ஹய்யோ........... நீங்க திருந்த மாட்டீங்க.. .

அது சரி கடைசியில என்ன..ஏதோ டிஸ்கி வேற, இதே மாதிரி தானே இன்னொரு பதிவுக்கு கூட போட்டீங்க யாராவது மதிச்சாங்களா?.. உங்களை தான் யாருமே மதிக்கறது இல்லையே அப்புறம் எதுக்கு இந்த பில்டப்..சீன் எல்லாம்.. ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஆஆ, உங்க இம்சை தாங்கலடா சாமி..........!!! எப்பத்தான் அடங்குவீங்களோ.. ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...!!


பீட்டர் தாத்ஸ் :- Keep your face to the sunshine and you cannot see the shadows.