உடல் மொழி என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானது. வீடு, அலுவலகம் எங்கே இருந்தாலும், நாம் பேசும் மொழியை விட நம் உடல் பேசுவதில் தான் அதிக பாதிப்புகள் இருக்கின்றன்.

நோய்யுற்று இருக்கும் ஒருவனை சென்று பார்க்கும் டாக்டர் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போதே அவனுக்கு நோய் அவனை விட்டு போய் விடும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அந்த டாக்டரின் பேச்சு, மருந்து போன்றவற்றை விட அவரின் புன்னகை தரும் அன்பு பாதி மேல் வியாதியை குறைத்து விடும். சேவை தொழில்’லில் இருப்பவர்களின் உடல் மொழி எப்போதும் அடுத்தவருக்கு நம்பிக்கையை தருமாறு இருக்கவேண்டும்.

சிலருடைய புற அழகை பார்க்கும் போதே ஒரு சிலர் முகத்தை சுளித்து “அவரின் புற அழகை பற்றிய விமர்சினத்தை பார்வையிலேயே வெளிப்படுத்துவார்கள். அது அவரை எப்படி மனதளவில் பாதிக்கும் என்று கொஞ்சம் கூட நினைக்காமல் தன்னுடைய மன விகாரத்தை முக பாவத்தின் மூலம் காட்டி அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவார்கள்.

எங்களுடைய அலுவலகத்தில் உடல் ஊனமுற்ற ஒருவர் வேலை பார்த்தார், அவரின் முகத்திலும் சிறு பாதிப்பு இருக்கும். ஒரு முறை என்னை பார்க்க வந்த, நம் ப்ளாக் நண்பர் ஒருவருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தேன். இவரை பார்த்து இவர் மனம் புண்படுபடி உடல் மொழியில் காண்பித்து விடுவாரோ என்று எனக்கு மனதுக்குள் ஒரு படப்படப்பு. ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக அந்த ப்ளாக் நண்பர் என் அலுவலக நண்பரை சிரித்த முகத்தோடு பார்த்து பேசி அனுப்பி வைத்தார். அதற்காக ப்ளாக் நண்பருக்கு என்னுடய நன்றியையும் அப்போதே தெரிவித்து கொண்டேன்.

உடல் மொழி என்பது அடுத்தவரை பாதிக்க கூடிய வகையில் நாம் அனுமதிக்க கூடாது, நம்மை மீறி நம் உடல் உறுப்புகள் பேசாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். நம் முளை இடும் கட்டளைக்கு தகுந்தார் போன்று தான் நம் அசைவுகளும் இருக்கின்றன. நம் மூளைக்கு நாம் நல்ல எண்ணங்களை கொண்டு சென்றாலே அது தன் வேலையை ஒழுங்காக செய்யும்.

எங்கள் வீட்டில் உடல் மொழிக்கு அதிக முக்கியத்துவம் தருவதுண்டு, அதாவது நான் எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், பேசும் போது என் உடல் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும், பொது இடங்களில் எப்படி நிற்க வேண்டும், உட்கார வேண்டும், வீட்டில் கூட உட்காரும் போது எப்படி உட்கார வேண்டும் என்று என்னுடைய ஆயா சொல்லி கொடுப்பார்கள். சரியாக இல்லையென்றால் நான் திருத்தி க்கொள்ளும் வரை என்னை பழக்கினார்கள் எனலாம். பெண் குழந்தை என்பதால் உடல் மொழியை மிக கவனமாக சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். வாய் திறக்காமல் கண்ணால் பேசியே பாதி வேலையை வாங்குவார்கள். இந்த பழக்கவழக்கங்கள் எனக்கு இப்பொது அலுவலகத்திலலும், வெளி இடங்களிலும் நிறைய நல்ல பலனை தருகிறது எனலாம்.

ஒருவர் பேசும் போதே அவரின் உடல் அசைவகளின் மூலம் அவரின் பாதி குணத்தை அறிய முடியும். சில விஷயங்கள் இந்த உடல் மொழியில் எனக்கு ஆச்சிரியத்தை தரும். என் கணவருக்கு இரண்டு கையையும் ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம். நான் பலமுறை, இந்த பழக்கத்தை மாற்ற சொல்லி சொல்லுவேன். ஆனால் அவரால் முடிவதில்லை. ஒரு முறை அவர் மிக ஆர்வமாக பேசி கொண்டு இருக்கும் போது அவரிடம் பேசிய படியே சென்று அவரின் இரு கைகளையும் சேர்த்து பிடித்து கொண்டேன். அவருக்கு உடனே பேச்சே நின்று போனது. இங்கு என் கணவர் பேசுவதே அவர் கைகளை கொண்டு என்று ஆகிவிட்டது அல்லவா?. கையை ஆட்டாமல் அவரால் பேசமுடியவில்லை என்பது தெரிகிறது. உடல் மொழி ஒருவரை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எப்போதுமே உயர் அதிகாரி என்றால் அவர் மேல் எப்போதும் நமக்கு ஒரு குறை இருக்கும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் பேசி அதை சரி செய்து கொள்ள வேண்டும், இங்கு உடல் மொழி மற்றும் communication ரொம்ப முக்கியம். ஒருவர் நம்மீது நல்ல எண்ணத்தில் இல்லை என்பதை அவரின் உடல் மொழியின் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதை கொண்டு அவரிடம் பேசி அவரின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்.

எங்களுடைய அலுவலகத்தில், என்னுடைய குரூப்’பில் உள்ள நண்பர்கள் நான் அலுவலகத்தில் நுழைவதை பார்த்தவுடன், பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை அப்படியே விட்டு விட்டு அவரவர் வேலையை சீரியசாக பார்க்க ஆரம்பித்தனர். அதில் நான் கவனித்தது, ஒருவர் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே மற்றவருக்கு நான் வருவதை சொன்னார், மற்றொருவர் என் வருகையை அவரின் தோலை அழுத்தி புரியவைத்தார். இதிலிருந்து அவர்கள் என்னை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்து கொண்டேன், மேலும் அவர்களில் ஒருவர் என்மீது கோபமாக இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒரு அரைமணி நேரம் கழித்து, office chat மூலம், கோபமாக இருந்தவரிடம்,”என்ன பிரச்சனை, என்னால் முடியும் என்றால் தீர்த்து வைக்கிறேன்“ என்றேன். அதற்கு அவர் ஒன்றும் இல்லையே” என்றார். நான் விடவில்லை “இல்லை நான் கவனித்தேன், என்னுடயை ஏதோ ஒரு செயல் உங்களை பாதித்திருக்கிறது, என்னவென்று சொன்னால் நான் மாற்றிக்கொள்கிறேன் “ என்று சொன்னேன். அவ்வளவு தான் அவரின் நாற்காலியை என்னிடம் எடுத்து வந்து போட்டு உட்கார்த்து கேட்ட முதல் கேள்வி “எதுக்கு எங்கள பத்தி போட்டு குடுத்தீங்க?” எனக்கு சிரிப்பு தாங்கமுடியாமல் சிரித்து விட்டேன். அவர் போட்டு கொடுத்தது என்பது அவர்களை பற்றி நான் என் உயர் அதிகாரிக்கு கொடுத்த “Report”. நான் இவர்களுக்கு சாதகமாக ஒரு “Report”. ஐ தான் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அதை அவருக்கு மட்டும் அல்ல மற்றவர்களையும் வரவைத்து நிதானமாக புரியவைத்தேன்.. “அட இது தான் மேட்டரா? என்று அவர்களும் சிரித்த முகத்தோடு, என் மேல் இருந்த கோபத்தை அன்றே விட்டு விட்டு வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

இங்கு அவர்கள் என்னிடம் எதுவுமே சொல்லாவிட்டாலும் அவர்களின் உடல் மொழியை கொண்டு பிரச்சனையை தீர்க்க வேண்டிய நிலை என்னுடையது. இதனால் என்ன பலனென்றால், அவர்களுக்கு இப்போது நான் எந்த வேலை கொடுத்தாலும் எந்த எதிர்ப்புமின்றி, நேரத்திற்கு செய்து கொடுப்பார்கள். ஒருவேலை, பிரச்ச்னை தீர்க்க படாமல் இருந்திருந்தால், அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு இருக்காது, இதனால் வேலை தடைபடும், மேலிடத்திலிருந்து வரும் கேள்விகளுக்கு நான் பொறுப்பாக வேண்டும், எல்லாவற்றிக்கும் மேல் வேலையெல்லாவற்றையும் நானே செய்ய வேண்டி இருக்கும்.

உடல் மொழியின் புரிதல் மிக அவசியம். உடல் மொழியில் படிக்க நிறைய உண்டு, கற்றுக்கொள்ளவும் நிறைய உண்டு. அது தவறாக, மற்றவரை பாதிக்கும் வகையில் இருப்பின், நாம் நம்மை கவனித்து கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கட..அம்மணி அறிவுரைய..!! ஆனா அவங்க friend சொல்றது சரிதாங்க.. சரியான.."கருத்து கந்தசாமி' யா இருப்பாங்க போல.. எப்ப பார்த்தாலும் எதாவது உபதேசம் பண்ணிக்கிட்டு.. இவிங்கள திருத்த முடியாதுப்பா... சரி தாதஸ்..நீ உன் உபதேசத்தை ஆரம்பி-

பீட்டர் தாதஸ் :- You cant have rosy thoughts about the future when your mind is full of blues about the past.