வெயில் படத்தில் வரும் “வெயிலோடு வெளையாடி “ பாட்டை பார்க்கும் போது எல்லாம் சிறு வயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டு நினைவுக்கு வருகிறது. எங்களுடைய மகனிடம் அதை எல்லாம் சுட்டிக்காட்டி பள்ளியிலாவது இப்படி விளையாடுவீர்களா என்று கேட்டேன். அவனோ.. “உன்னை மாதிரி நான் என்ன “கேவுருன்னு’ (அதாங்க நம்ம கேப்பங்கஞ்சி வைக்கறோமே அது) நினைச்சியா?.. ன்னு கேட்கிறான்.??

எத்தனை அற்புதமான விளயாட்டுக்கள்.

கோலி அடித்தே எங்கள் வீட்டு மதில் சுவரை ஓட்டை செய்துவிட்டு போன என் வயது சிறுவர்கள். அவர்களுடன் நானும் என் சின்ன அண்ணனும் சேர்ந்து நடுரோட்டில் கையை ரோட்டில் பதித்து ஜான் அளவு வைத்து அளந்து அளந்து விளையாடிய கோலி விளயாட்டு.

அண்ணனை போலவே எனக்கும் வேண்டும் என்று அழுது அடம் பிடித்து வாங்கிய பம்பரம், அதை ரோட்டில் அண்ணனுடன் சேர்ந்து வட்டத்துள்ளிலிருக்கும் அடுத்தவனின் பம்பரத்தை நம் பம்பரத்தால் குத்தி வெளியில் எடுக்க முயற்சி செய்த நாட்கள். என்னால் சரியாக குத்தி எடுக்க முடிந்ததில்லை. அதற்காக அண்ணனிடம் படு கேவலமாக திட்டு வாங்கியது. (அவங்க friends முன்னாடி அவருக்கு அசிங்கமா போய்டும்)

சோடா பாட்டில் மூடியின் விளிம்புகளை சுத்தியால் அடித்து விரித்து நடுவில் இரண்டு ஓட்டை போட்டு டொயன் நூல் சேர்த்து இழுத்து, மற்றவர்களின் நூலை அறுத்து விளயாடுவது.

கண்ணாடி எல்லாம் சேர்த்து வைத்து அரைத்து நூல் மாஞ்சா போட்டு, (அண்ணன் என்ன செய்தாலும் அங்கு நானும் பிரசண்ட். ஆகிவிடுவேன்.), பட்டம் விட நூல் தயார் செய்து அண்ணனுக்கு பட்டதை ஏற்ற உதவி செய்து விட்டு..மேலே போனவுடன் அதை வாங்கி சும்மாவாவது கையில் வைத்து க்கொண்டு, பட்டம் விட்டென் என்று சொல்லிக்கொண்டது...

பனஓலையில் திருப்பிபோட்டு உட்கார்ந்து ஒருவர் இழுக்க..பயணம் செய்தது

வேப்பங்காய் கொட்டையை கைவிரலின் வெளிப்புறம் வைத்து குத்தி ரத்தம் வர வைத்தது.

கல்லா மண்ணா விளையாட்டு, நொண்டி, ஓடிப்பிடித்தல்., சில்லி கல் வைத்து கட்டம் போட்டு நொண்டி அடித்து விளையாட்டு

பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்காய்

கூட்டாஞ்சோறு..

எங்கு மணலை கண்டாலும் இருவர் உட்கார்ந்து, குச்சியை அதில் மறைத்து விளையாடும் விளையாட்டு.....

ஒருவரை குனியவைத்து, ஓடி வந்து மேல் ஏறி குதித்து சென்று விளையாடுவது..

அண்ணனை போலவே மரம் ஏறி மேலிருந்து விழுந்து, முதுகு வளைந்து போக, அண்ணன் மேல இருந்து சிரிப்பாய் சிரித்தது..

பட்டாம்பூச்சி, தும்பி பிடித்து, அதை நூலால் கட்டி, மதில் சுவரில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது பறக்க முடியாமல் தவிப்பதை ரசித்தது.....

ஆட்டை ஓட ஓட விரட்டி, பால் கறந்து விளையாடியது (எங்கவீட்டு ஆடு இல்லைங்க)

சொல்லிக்கொண்டே போகலாம்.....

இதில் எந்த விளையாட்டுமே என் மகன் விளையாட ஆர்வம் காட்டியதில்லை, தெரிந்து வைத்திருக்கவும் இல்லை என்றே நினைக்கிறேன்... தெரிந்தவை

டி.வி
கம்புயூட்டர்
தொலைபேசியில் ஒன்றைநாள் நண்பர்களுடன் பேச்சு
சினிமா (ஆங்கிலம், இந்தி மட்டுமே)
கிரிக்கெட்
கால்பந்து
Chess
கேரம்.

இதில் சொல்லிகொள்வது அவரு “hi-fi” நாங்க “கேவுரு“

அணில்குட்டி அனிதா :- என்ன கவி ரோட்டுல எல்லாம் போய் விளையாடுவீங்களா நீங்க? சரி உங்க புள்ளைய நீங்க இப்படி free ஆ ரோட்டுல விட்டு வளக்கறீங்களா? ரோட்டுக்கு அவரு போனவே..”என்ன ரோட்டுல உனக்கு வேலை” ன்னு கேக்கறீங்க?.. ஆனா அவரு உங்க “கேவுரு” விளையாட்டு எல்லாம் விளையாடலன்னு கவல வேற.. சரியா இல்லையே..?.. உங்க புள்ள டெக்னாலாஜி டெவலப் க்கு தகுந்த மாதிரி விளையாடறாரு.. எதுக்கு அவர பாத்து உங்களுக்கு பொறாமை சொல்லுங்க..?!

பீட்டர் தாத்ஸ் :- Many of life’s failures are men who did not realize how close they are to success when they gave up.