ஒவ்வொரு வெள்ளியும்(முடிந்தவரை), இனி புதிய பகுதி கேப்பகஞ்சி with கவிதா & அனிதா வரவிருக்கிறது. இதில் நம்முடைய பிளாக் நண்பர்கள் மற்றும் வெளியிலிருந்தும் நேர்காணல் செய்து அதன் உரையாடல் தொகுப்பு பதிவாக்கப்படும். நேர்காணலின் போது நண்பருக்கு கேப்பங்கஞ்சி ஒரு லோட்டா பால் விட்டு சர்க்கரை போட்டோ இல்லை தயிர் விட்டு உப்பு போட்டோ அவரவர் விருப்பபடி கொடுக்கப்படும்.. எங்களிடம் முதலில் மாட்டியவர் - நம்ம ஒன்லி ஒன் கைப்புள்ள

வாயைப்புடுங்கற ரவுண்டு :-
கவிதா :-வாங்க கைப்ஸ்! எப்படி இருக்கீங்க ?!!
வணக்கம் கவிதா, ஹாய் அனிதா! இது வரைக்கும் நல்லா தான் இருக்கேன். இனிமே எப்படி இருக்கப் போறேங்கிறது உங்க கேள்வி முடிஞ்சப்பிறகு தான் தெரியும்.
கவிதா -
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லு-ங்களேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாலியாக சிரித்து மகிழ நகைச்சுவையான பதிவுகளை இட்டு, படித்தவர்கள் மகிழ்ச்சியான நினைவுகளுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துடைய நண்பர்களினால், தொடங்கப் பட்ட ஒரு ‘Cool Hangout Place’ போன்ற ஒரு கூட்டு வலைப்பூ முயற்சி. அனைவரது உழைப்பினாலும், ஒத்துழைப்பினாலும் சங்கத்துக்கு நல்ல ஆதரவு கெடைச்சு நல்லபடியா நடந்துட்டிருக்கு.
கவிதா :-
உங்க படிப்பு, வேலை, உங்க குடும்பம் பற்றி, நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க..
அது என்ன விருப்பப்பட்டா...? அதுக்குத் தானே வந்துருக்கோம். நீங்க ஊத்தப் போற கேப்பங்கஞ்சிக்காகவாச்சும் ஒரு ரெண்டு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லித் தானே ஆவனும்? எம்பி எம்பி ஒரு எம்பிஏ டிகிரி வாங்குனதாலே ஊர் ஊராச் சுத்தி ப்ளாக் படிக்கிறதுக்கு ஒரு கன்சல்டண்ட் வேலை கெடச்சிருக்கு. எதோ எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாராம்னு ‘நான் கன்சல்டண்ட், நான் கன்சல்டண்ட்’னு ஊரை ஏமாத்திட்டிருக்கேன். என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லனும்னா, எங்க தோப்பனார் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், தாயார் தடிப்பசங்களுக்காகவே உழைச்சு ஓடாத் தேய்ஞ்ச ஒரு இல்லத்தரசி, இளவல் ஒருத்தரு இருக்காரு...சமீபத்துல அவரும் விரிவுரையாளரா சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்காரு. நாலு பேரைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பம் எங்க குடும்பம். என்னைத் தவிர எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க.
கவிதா:- இவ்வளவு படிச்சி இருக்கீங்க..ஆனா தெரியவே இல்ல.. ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.. உங்களின் வேலை சம்பந்தமா உங்களின் வருங்கால திட்டம் என்ன?
என்னது...தெரியவே இல்லியா? ஏன் நம்ம மூஞ்சைப் பாத்தா மாங்கா மடையனாட்டம் இருக்கா? தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லீங்க. சான்ஸ் கெடச்சா சந்துல சிந்து பாடிடுவோம்ல? வருங்கால திட்டம்னு பாத்தா... இன்னும் நெறைய காசைச் சேர்க்கனும். வாங்கி அதை கல்லால போட்டுக்கணும். அம்புட்டுத் தான்.
கவிதா:- பெண் – Define
ஆஹா! கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா! எங்கடா ஆப்புன்னு எதுவும் இன்னும் வரலியேன்னு பாத்தேன். அப்படியே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா கேப்பங்கஞ்சின்னு ஒன்னு குடுத்தீங்களே அதை வேற குடிச்சிட்டேன்?

ஒன்னு பண்ணறேன். காலேஜ் படிக்கும் போது ‘வாட்டாக்குடி இரணியன்’னு படம் ஒன்னு வந்துச்சு. அந்தப் படத்துல கோழி குஞ்சுகளை மீனா கொஞ்சற மாதிரி ஒரு ஸ்டில் ஒன்னு செய்தித் தாள்ல வந்துச்சு. அதை அப்படியே(!) காப்பியடிச்சிட்டு, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு வரி ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா கிறுக்கி வச்சிருக்கேன். அதை கீழே இருக்கற சுட்டியில போய் படிச்சிப் பாருங்க. அதுலேயே நாங்க டிஃபைனி வச்சிருக்கோம்.
http://beta.blogger.com/
கவிதா :- உங்களின் interest எழுதுவது, படிப்பது தவிர..
எழுதுவதும் படிப்பதும் என் interestனு யாரு சொன்னா? நெறைய விஷயத்துல மூக்கை நுழைச்சி ஒன்னையும் உருப்படியாத் தெரிஞ்சிக்காம இருக்கறது தான் நம்ம ஒரே interest. அதுலேயே ரொம்ப நாளா இருக்கறதுன்னு பாத்தா கேலிகிராஃபியும்(Calligraphy) தபால் தலை சேகரித்தலும், இப்போ புதுசா போட்டா புடிக்கிறதும்
அனிதா:- தல, பெண்ணியம் பற்றி உங்களின் கருத்து...
இதுக்கு அம்மணியே பரவால்ல போலிருக்கு. இன்னிக்கு எனக்கு டின்னு கட்டி விடாம அனுப்பப் போறதில்லைனு நெனக்கிறேன். இருந்தாலும் நீ கேக்கறியேங்கிறதுனால சொல்றேன். உண்மையில சொல்லப் போனா எனக்கும் பெண்ணியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது. சரி, என்னான்னு தெரிஞ்சிக்கலாம்னு விகிபீடியாவுக்குப் போய் ‘Feminism’னு தேடுனேன். எக்கச்சக்கமா மேட்டர் வந்துச்சு. யார் யாரோ ஃபிரெஞ்சு, பிரிட்டிஷ் மேடம் பேரெல்லாம் போட்டுருந்துச்சு. பெண்கள் கல்விக்காகவும், ஓட்டுரிமைக்காகவும், சம உரிமைக்காகவும் போராடறது தான் பெண்ணியம் அப்படீங்கற மாதிரி போட்டிருக்கு. அப்படியே மேல படிச்சா வர்ஜினியா உல்ப்(Virginia Woolf) அப்படீங்கற எழுத்தாளர் ‘Feminism’ அப்படிங்கற சொல்லையே வெறுக்கறதா போட்டுருந்துச்சு. அவங்களைப் பொறுத்தவரை ‘Feminism’னு தனியா எதுவுமில்லையாம். எல்லாமே ‘Humanity’ தானாம். அவங்களோட பர்சனல் வாழ்க்கை பத்தி எல்லாம் படிச்சும், அதைப் பத்தி எல்லாம் ஆராயாம அவங்களோட கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா ‘பெண்ணியம்’னு சொல்றது மனிதத் தன்மைக்குள்ள அடங்குனதுன்னு தான் எனக்கும் படுது. ஆண் பால், பெண் பால்ங்கிறதை மறந்து இரு பாலரும் அந்த மனிதத் தன்மையை மட்டும் மதிக்கக் கத்துக்கிட்டா ‘பெண்ணியம்’ அப்படின்னு தனியா எதுக்கும் தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அந்த மனிதத் தன்மைக்குள்ள பல பல மைக்ரோ சமாசாரங்கள் அடங்கியிருக்குன்னும் நெனைக்கிறேன். அது என்னென்னன்னு வெளக்கமாச் சொல்லவும் பேசவும் நெறைய அனுபவமும் அறிவும் தேவைன்னும் நெனக்கிறேன்.

இது இப்படியிருக்க... கருத்தம்மா படத்துல பார்த்த ஒரு காட்சி. டைரக்டரோட ‘டச்’ வெளிப்படற ஒரு காட்சி. கைகால் முடமானத் தன் தந்தையான பேராசிரியர் பெரியார்தாசனைக் கருத்தம்மா ராஜஸ்ரீ குளிப்பாட்டுவது போல அமைந்த ஒரு காட்சி. தென்னங்கீற்று இடுக்குகளின் வழியாக முதியவர் குளிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் “டேய்! தாத்தா அம்மணமா குளிக்கிறாருடா”ன்னு சொல்லுவதாக வரும். “டேய்! போங்கடா” என அந்தச் சிறுவர்களை ராஜஸ்ரீ விரட்டுவார். அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை. ஏனெனில் விகிபீடியாவில் liberation, suppression, equality இவைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் மேலே சொன்னது போன்ற எண்ணற்றப் பெண்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. அப்பெண்களின் பார்வையில் பெண்ணியம் என்பது எது? பதில் தெரியாததாலும், பெண்ணியத்தைப் பற்றி பேச கவிதா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாலும் உண்மையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன். யாருக்கிட்டயாச்சும் விளக்கம் இருந்தாச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஒன்னை பதிலு சொல்லச் சொன்னா கேள்வியாடா கேக்குறேன்னுட்டு, பேட்டியை முடிச்சிட்டு கெளம்பற நேரத்துல கேப்பங்கஞ்சிக்கு பில்லை நீட்டிடாதே தாயீ. ஜோபியில துட்டு வேற இல்ல!

அனிதா:- தல உங்களின் அழகின் ரகசியம் என்ன?
இப்போ கேட்டியே இது கேள்வி. இப்பச் சொல்றதை, நல்லா கொட்டை எழுத்துல ஃபாண்ட் சைஸ் அம்பதுல போட்டுக்க. நம்ம மேனி எழிலோட ரகசியம் என்னான்னு கேட்டீன்னா சமீப காலம் வரைக்கும் ‘மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த விக்கோ டர்மெரிக் இல்லை காஸ்மெடிக் தான்’. ஆனா பொண்ணுங்க போடற ஃபேர்னஸ் க்ரீம் எதுக்குன்னு சூர்யா கேள்வி கேக்கச் சொல்லிக் குடுத்ததுக்கப்புறமா இப்பல்லாம் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்’ தான். இதெல்லாமும் பூசிக்கலைன்னாலும் நாம அழகோ அழகு தான். ஆனா நாம க்ரீமைப் பூசிக்கிட்டா ஒரு நாலு பேரு வீட்டுல அடுப்பெரியுமில்ல? அதுனால இதை ஒரு பொது சேவையா செய்றேன். வேற ஒன்னுமில்லை. இந்தப் பதிலை மட்டும் போல்ட் இட்டாலிக் அண்டர்லைன்ல கட்டம் கட்டிப் போட்டுடு சரியா?
கவிதா :- நீங்க சாதிக்கனும்னு நினைக்கற ஒரு விஷயம்...
ஒரு விஷயமாவது முழுசா உருப்படியாத் தெரிஞ்சு வச்சிக்கணும். இத சாதிக்க முடிஞ்சாலே அது எனக்குப் பெரிய விஷயம் தான்.
அனிதா :- ஏன் தல... எல்லார் கிட்டயும் ஒத வாங்கறத ஒரு தொழிலாவே ஆக்கிட்டீங்க?
என்ன அனிதா பண்ணறது? ஒத வாங்குனதுக்கப்புறம் ‘எவ்வளோ அடி வாங்குனாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா’னு ஒரு சர்டிஃபிகேட் குடுத்துடறாங்களே? அது அடுத்ததா ஒத வாங்குறதுக்கு ஒரு ஊக்க மருந்தா அமைஞ்சுப் போயிடுது. என்ன பண்ணறது?
கவிதா:- நீங்க
சிவகுமார் சார் பதிவில் ஒருமுறை பொருளாதாரம் பற்றிய உங்களின் கருத்து சொன்னதற்கு புத்தகம் பரிசா வாங்கனீங்க.. அது போன்ற விஷயங்களை, அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றை உங்கள் பதிவிலும் எழுதுலாம் இல்லையா? நீங்க எழுதாம இருக்க என்ன காரணம்.?
ஹி...ஹி...எழுதலாம் தான். ஆனா அடுத்தவங்க கிட்டேருந்து கத்துக்கறதுல இருக்கற ஆர்வம், நாம நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு வரும் போது இல்லாத போயிடுதுன்னு நெனக்கிறேன். சுயநலமும் சோம்பேறித் தனமும் தான் உருப்படியா எதுவும் எழுதாததுக்குக் காரணம். வேற என்ன?

கவிதா :- சரிங்க தல, நிறைய வெளியிடங்களுக்கு போயிருக்கீங்க.. அப்படி நீங்க போகும் போது கற்றுக்கொண்ட சில விஷயங்கள்?
எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. உங்களுக்கு இருக்கற நிக்நேம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மோசி, மோகா, மோகு, மாமா, கைப்பு, கைப்ஸ்...அம்புட்டுத் தான்னு நெனக்கிறேன்.
2. உங்க பள்ளிபடிப்புல உங்களுக்கு மறக்க முடியாத டீச்சர் ?
படிப்போட சேர்த்து, நல்லது கெட்டதுகளையும் சொல்லிக் குடுத்த எங்கத் தமிழ் மிஸ்.
3.உங்கக்கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்
சோம்பேறித்தனம், அவநம்பிக்கை, சுயநலம்
4.ப்ளாக்ல சந்திக்க விரும்பற 3 பேர்..
அப்படின்னு குறிப்பா யாருமில்ல. சென்னையில் ஒரு வாரம் தொடர்ச்சியாத் தங்க வாய்ப்பு கெடச்சா, சென்னையில் இருக்கற பதிவர்கள் ஒரு சிலரை-யாவது சந்திக்க ஆசை. அடுத்த வாட்டி சென்னை போகும் போது தான் முயற்சி செய்யனும்.

5.நீங்க ஓவரா அடிவாங்கி அழுதது எப்ப?
ஒன்னா ரெண்டா...நெனைவு வச்சி சொல்றதுக்கு? பெரும்பாலும் சாப்புட மாட்டேன்னு அடம்புடிச்சி அடி வாங்குனது தான் அதிகமா இருக்கும். அடுத்ததா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அழுது அடிவாங்கினதா இருக்கும்.

6. ஆமா, நீங்க எதுக்கு ப்ளாக் எழுத வந்தீங்க?
தமிழ்ல எழுதறதும், படிக்கறதும் மறக்காம இருக்கறனும்ங்கிறதுக்காக.
7. இதுவரைக்கும் நல்லா இருக்குன்னு நினைக்கற உங்க 3 பதிவுகள்?
அப்படின்னெல்லாம் பாக்க ஆரம்பிச்சா மொத்தமாவே மூனு தான் தேரும். இருந்தாலும், படிக்கிறவங்க ரொம்ப ரசிச்சதுன்னு நான் நெனைக்கிற மூனு பதிவுகள்.
வச்சான்யா ஆப்பு,
தடிப்பசங்க #3 ,வயசாயிடுச்சாங்க
8.ப்ளாக்ல உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்..
என்னோட ப்ளாக்ல தானே?...மூனென்ன மூவாயிரம் இருக்கு! வளவளன்னு எழுதுறது, சமீபகாலமா பின்னூட்டம் போடுறவங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாம இருக்கறது, ஜாலியானப் பதிவா எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கும் போது பெரிய இவனாட்டம் செமத்தியா பிளேடு போடறது.
9.உங்களின் தம்பியிடம் பிடித்த விஷயம் என்ன?
பாசக்காரப் பய. ஆனா நேர்ல பாத்துக்கும் போது எலியும் பூனையும் தான்.
10.கைப்புள்ள /மோகன், ஒற்றுமை& வேற்றுமை.
ஒற்றுமை - நிறம், அப்பப்போ உதார் விடறது, நமக்குன்னே அங்கங்கே தயாரா இருக்குற ஆப்பு.
வேற்றுமை - ஒரு இளைஞனாயிருந்தும், இன்னும் ஒரு இளைஞி கையைக் கூடப் புடிச்சு இழுத்ததில்லை. அதுக்கான தில்லுமில்லை J

அனிதா :- நன்றி தல, சூப்பரா பதில் சொன்னீங்க.. இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் க்கு பதிலா நீங்க ஒரு தத்துவம் சொல்லி இந்த நேர்காணலை முடிச்சி வைங்க.
கைப்புள்ள :- ஓகே. சாக்ரடீசோட ஒரு கிரேக்கத் தத்துவத்தைச் சொல்லி முடிச்சுக்கிறேன்.

In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”

வாய்ப்பளித்தமைக்கு நன்றி அனிதா, கவிதா. அடுத்த வாரம் வரப் போறவங்களுக்காவது கேப்பங்கஞ்சியை, இட்லி மாவுல செஞ்சு குடுக்காம இருக்க முயற்சி பண்ணுங்க. வர்ட்டா?