ஆபிஸ்சில் நடக்கும் போது, என்னுடைய செருப்பு அறுந்து விட, செக்யூரிட்டியுடம் பக்கத்தில் எங்கே தைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு , அவர் சொல்லிய இடத்தை கண்டுபிடித்து சென்று பார்த்தால், ஒரு தள்ளாத பாட்டி இருந்தார்கள், சரி செருப்பு தைப்பவர் இங்கே எங்காவது பக்கத்தில் தான் இருப்பார் என்று என் கண்கள் தேட, பாட்டியோ என்னை “வாம்மா, வாம்மா” என்றார்கள். கொஞ்சம் தூரத்தில் ஒரு சின்ன பையன் எல்லா கலரும் கலந்த கலவை சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தான். இந்த பையன் தான் தைப்பவனோ..அவன் சாப்பிடுவதால் பாட்டி வர கஸ்டமர்களை விடாமல் கூப்பிடுகிறார்களோ என்று தோன்றியது.

எனக்கு அவரிடம் செருப்பை தைக்க கொடுக்கலாமா என்று தயங்கிய நேரத்தில், பாட்டி கையை நீட்டி செருப்பை கேட்டார்கள்..தயங்கியபடியே செருப்பை கொடுத்தேன். பாட்டிக்கு எப்படியும் 80 வயதுக்கு மேல் இருக்கும், கை, கால் தோல் சுருங்கி, வெளுத்து போன பரட்டை தலையுடன், இடுக்கிய கண்களோடு இருக்கும் அவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும் என்று நினைத்தேன்.... செருப்பை கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு எப்படி செய்ய போகிறார்களோ என்று பார்த்து கொண்டு இருந்தேன்.

பார்வை மங்கிபோன பாட்டி, பார்வையை முடியாமல் கூர்மையாக்கி, நடுங்கிய கையோடு நூலை எடுத்து, மெழுகு தடவி, குத்தூசி எடுத்து குத்துகிறார்கள் குத்துகிறார்கள்..ம்ம்ஹீம் எங்கே.... முடியவில்லை.. விடவில்லை அவர்களும்.. ஒருவழியாக குத்தி பின்புறம் நுலை மடக்கி உள்ளே இழுக்கும் சமயம் நூல் வராமல் சிக்கிவிட.. திரும்பவும் ஊசியை வெளியே எடுத்து விட்டு.. நூல் சிக்கலை எடுத்துவிட்டு குத்தூசியை முடியாமல் செருப்பினுள் நுழைத்தார்கள்..

எனக்கோ அவர்கள் ஒவ்வொரு முறை ஊசியை குத்தும் போதும் எங்கே கையில் குத்திக்கொள்ள போகிறார்ளோ என்று திக் திக் என்றது.... ஒருவழியாக முடித்துவிட்டு, குரல் எழும்பாமல் “அஞ்சு ரூபா குடு” என்றார்கள். ஆனால் எனக்கு இன்னும் சேர்த்து கொடுக்கலாம் என்று தோன்றிய மறுகணம், பணம் நிறைய கொடுக்கிறார்கள் என்று அந்த பையன் கவனித்து விட்டால் பாட்டியையே செருப்பு தைக்க நிரந்தரமாக உட்கார வைத்து விடுவானோ என்று தோன்ற,..கேட்ட பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன்..

ஆனால் மனதுக்குள் பாரம்...தினமும் டி.டிகே சாலையை கடக்கும் போது, அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே.. 35-45 வயதுக்குட்பட்ட திடகாத்திர தேகம் கொண்ட ஆண்கள் (3 பேர் இதுவரை தினமும் நான் பார்ப்பது), அந்த இடத்தை தங்களுது நிரந்தர வீடாக்கி, முழுநேர வேலையாக பிச்சை எடுத்து கொண்டிருப்பது நினைவுக்கு வர..

தள்ளாத வயதில் பாட்டியும் உழைப்பும் ..சோம்பேறிகளின் பிச்சை எரிச்சாலாகவும்............வாழ தகுதியில்லாத மனிதர்கள் என்று அவர்களை வெறுக்க தோன்றியது.......

அணில் குட்டி அனிதா :- ஏன் கவிதா.. எப்பவும் பெரிய தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கறீங்க. . மனசு பாரமா இருக்குன்னு சொன்னீங்களே பாட்டிய உங்க வூட்டுல கொண்டுப்போய் வச்சி சோறு போட வேண்டியதுதானே. .கூட கொஞ்சம் காசு கொடுக்கவே உங்களுக்கு மனசு வரல.. ஆனா.. வாய் நிறைய நல்லா பேசிங்க....... சரி சரி.. முறைக்காதீங்க.. ம்ம்... புரியுது.. உனக்கு இங்க இடம் கொடுத்து வளர்க்கறதே பெரிய விஷயம்..ன்னு சொல்றீங்க.. ம்ம்.... எதுக்கும் நான் கொஞ்சம் இனிமே அடக்கி..வாசிக்கறேன்..... அம்மணி கோவத்துல என்னைய தொறத்திட போறாங்க...

பீட்டர் தாத்ஸ் :- When we have done our best, we should await the result in peace.