காதல் காமம் இரண்டுக்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் இருக்கிறது. காதல் தொடக்கம்..காமம் முடிவு என்று சொல்லலாமா..? இல்லை காமம் தான் முதல் அப்புறமே காதல் என்று சொல்லலாமா?.. நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார் - ஒரு பெண்ணை பார்த்ததும், அவளை தொட்டுப்பார்க்க வேண்டும், அவளை நமக்கென்று சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும், அந்த தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் வருவதால் காமம் தான் முதல் அது பிறகு காதலாய் மாறுகிறது. பார்த்தவுடன் காதல் என்பது எல்லாம் பேத்தல் என்ற அவரின் மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பெண்ணை/ஆனண பார்த்தவுடன், இவள்/இவன் நமக்கு (தனக்கு மட்டும்) சொந்தம் ஆகவேண்டும் என்று நினைப்பதில் காதல் மட்டும் இருக்கிறாதா?.. நிச்சயம் இல்லை. காமம் கலக்காத காதல் இருக்கிறது என்பது எல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். அப்படி நிச்சயமாக ஒன்றும் இல்லை. ஆனால் காதல் கலக்காத காமம் நிறையவே நிரம்பி கிடக்கிறது. பார்க்கும் பார்வையிலிருந்து, நடந்துக்கொள்வது, பேசுவது, தொடுவது எல்லாவற்றிலுமே மிதி மிஞ்சி பார்க்கலாம். கவியரசு வைரமுத்து அவர்களின் மிக அழகாக அற்புதமான வரிகள்-

ஆடைக்குள் நிர்வானத்தை தேடுவது காமம்
நிர்வானத்துக்குள் ஆடையை தேடுவது காதல்

காதலுடன் எழுதும், பேசும் வரிகளில் ஆபாசமும், வக்கிரமும் சேர்ந்து இருக்காது. அதற்கு நேர் எதிர் காமத்துடன் பேசும், எழுதும் வார்த்தைகளில் நிறைய ஆபாசமும், வக்கிரமும் இருக்கும். நம் தமிழ் சினிமா பாடல்களில் நிறைய உதாரணங்கள் இரண்டிற்குமே உண்டு. ஒரு ஆணோ பெண்ணோ பேசும் போதே அதில் காதல் மிஞ்சி இருக்கிறதா இல்லை காமம் மிஞ்சி இருக்கிறதா என கண்டுக்கொள்ளலாம். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம்.

நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை விரும்பினார், திருமணமும் செய்துக்கொள்லும் அளவிற்கு விரும்பினார், அவரின் விருப்பம் என்ற வார்த்தைக்கு பொருள் காதல் இல்லை matching என்கிறார். இன்றுவரை புரியவில்லை, ஒரு பெண்ணை மனதிற்கு பிடித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஒருவர் அது காதல் இல்லை என்று சொல்வது விளங்காத ஒன்று. அதாவது காதல் என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவது, படிப்பு, பணம், அழகு, எதிர்காலம் எதையுமே பார்க்காமல் வருவது. ஒருவரை பார்த்தவுடன் வருவது. ஆனால் நண்பருக்கு வந்த விருப்பம், எதிர்பார்ப்புக்கு உட்பட்டது, இவள் நம் வாழ்க்கைக்கு சரியாக இருப்பாள், இவளின் குணம் நம் வாழ்க்கை துணையாக இருக்க பொருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் வந்ததால்..அதற்கு பெயர் matching என்றார்.

காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கினாலும், பிறகு நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது என்பது தான் உண்மை. காமத்திற்கு அப்படி ஒன்றும் இல்லை ஒன்றே குறிக்கோள் “உடம்பு”. காதலை போன்ற மனம் சம்பந்தபடாத மிக எளிதான விஷயம். காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம். காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. காமம் முயற்சிப்போம் கிடைத்தால் சரி இல்லையேல் ஒரு பிரச்சனை இல்லை. காதல் கிடைக்கவில்லை என்றால், அதன் விளைவு அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனையும், விரக்தியும், காதல் எளிதல்லவே.... உடம்புக்கும்,மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமமும் காதலும்..

கவியரசு ஒரு படத்தில் சொன்னது - உன் காதல் மட்டுமே வேண்டும் என்பதால் உன்னையே சுற்றி வருகிறேன்.. யாரை வேண்டுமானல் காதலிக்கலாம் என்றால் ஒரு நாயை கூட காதலிக்கலாம். நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன் பின்னாலேயே இருக்கிறேன்.. இல்லையேல் ஒரு விபச்சாரியிடம் போய் இருக்கலாம்.. (வார்த்தைகள் மாறியிருக்கலாம் - எப்போதோ கேட்டது).

நிறைய குழப்பம் காமத்திற்கும் காதலுக்கும், நிறைய மக்கள் இரண்டையும் சரியாக புரிந்துக்கொள்ளாமல், சிலர் காதலை காமமாக நினைத்துக்கொள்வதும், மேலே சொல்லியது போன்று காதல் என்றாலும் அது காமத்தில் முடிவதால் காமமே கண்களுக்கு பெரிதாக தெரிவதால், காதலை காமமாக நினைத்து எழுதும் கவிதைகளையும், கதைகளையும் படிக்க நேர்ந்ததால்.. இதை எழுத நேர்ந்தது.....

அணில் குட்டி அனிதா:- ஐயோ....ஐயோ......ஐயோஓஓஓஓ......................... கவிதா..ஆஆ......... நீங்க லூசா.. டைட்டா..?!! அந்த குழப்பத்தை முதல்ல தீர்த்து வைங்க..!! தாங்க முடியலைங்க.. உங்க லக்ச்சர். ஏங்க இப்படி..?!! வர வர உங்க இம்ச தாங்க முடியலைங்க..சரி இப்ப என்னத்தான் சொல்லவரீங்க..?!! மக்களா! அம்மணிக்கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க.. .. எந்த நேரத்துல என்ன செய்வாங்களோ..?!! ஏன்னா.. அவங்க..இன்னும்.. லூசா ..டைட்டா?!! confirm பண்ணல...............

பீட்டர் தாத்ஸ் :- The joy that you give to others is the joy that comes back to you.