எங்களுடைய அலுவலக செக்யூரிட்டி சில நேரங்களில் பொழுது போகாமல் இருக்கும் போது பேப்பர் பேணா வைத்துக்கொண்டு கோலம் போடுவதை பார்த்திருக்கிறேன். அவரின் திறமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மிக நேர்த்தியாக, தெளிவாக, அழகாக போடுகிறார். அவரை பாராட்டி, அவரிடம் எங்களது வீட்டில் வாங்கும் பெண்கள் பத்திரிக்கையை கொண்டுவந்து கோல ப்போட்டி இருக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று கொடுத்தேன். இது பழக்கமாகி, 2 புத்தகங்கள் நான் கொடுப்பேன், படித்துவிட்டு அவர் திரும்ப கொடுத்தவுடன் திரும்பவும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன்.

நேற்று அவரிடம் உங்கள் மனைவி க்கூட இதை படிக்கிறார்களா? என்று கேட்டதற்கு.. தயக்கத்தோடு “இல்லைங்க” என்று சிரித்து சென்றவர், திரும்பி வந்து, மேடம், என் மனைவிக்கு இந்த புத்தங்களை நான் படிக்க கொடுக்கவில்லை என்பதே உண்மை, ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.

ஒரு பெண் புத்தகங்கள் படிப்பதின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் இல்லை, அதையும் தாண்டி, தன்னால் தனியாக இருக்க முடியும், ஆணை விட தான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை, இருவரும் சமம் போன்ற சிந்தனையும் கூடவே வளர்ந்துவிடுகிறது. அதில் என்ன தவறு என்று விதண்டாவாதம் செய்ய தயாராக இல்லை, மேலும் ஆணும் பெண்ணும் எந்த சமயத்திலும் சரிசமமாக இருக்க வாய்பில்லை. இது அறிவியல் சார்ந்த உண்மை. :)

அவருடைய சொந்த வாழ்க்கை, தன் மனைவி எப்படி இருந்தால் தன் வாழ்க்கைக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைக்கும் நல்லது என்பதில் தெளிவாக இருக்கிறார், இது ஆணாதிக்கம் என நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டு போகட்டுமே, அதனால் அவருக்கும் என்ன நஷ்டம் அல்லது லாபம் இருந்துவிட போகிறது. எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆணும் தன் குடும்பம் அமைதியாக இருப்பது தன் மனைவியின் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்காள், தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறார்கள் என்பது பெண்களுக்கு பெருமை தானே.. நம்முடைய சென்னை விவாகரத்து நீதிமன்றத்தில் ஒரு வருடத்தில் திருமணமுறிவுக்காக 2000 வழக்குகள் வந்துள்ளன. அதிலும் எல்லாமே காதல் திருமணம் மட்டுமன்றி, அவை திருமணம் ஆன 6 மாதங்களுக்குள் கொடுக்கப்பட்ட வழக்ககுகள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சியான விஷயம். பெண்கள் இழந்தும், மறந்தும் வருவன

  • ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளதல்
  • விட்டுகொடுத்தலை மறந்துபோனது
  • பொறுமையின்மை
  • அதிகமான படிப்பும் அதனால் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் விதமும்
  • ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்
  • ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை
  • தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
  • தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை.
  • வளர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம்
  • கலாச்சார மாற்றங்களினால் தங்களின் நிலை மறந்த சிந்தனை.

பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள், ஒரு பெண் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா எதை சாதிக்கவில்லை நாம் சாதிக்காமல் போக.?. நல்ல குடும்பத்தை அவர்களால் கொடுக்க முடிந்தது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க முடிந்தது.அவர்கள் வேலைக்கு செல்லவில்லை பொருள் ஈட்டவில்லை தவிர, ஏதாவது குறை வைத்தார்களா?. வெளி உலகமே தெரியாதவர்கள், ஆனால் வீட்டின் நிம்மதி கெட்டுபோனதா? இல்லையே..! இப்போது நம்மால் நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடிகிறதா?. வேலைக்கு செல்கிறோம் என்பதால் என்ன தலையில் 2 கொம்பு முளைத்து விடுகிறதா ?. பொருள் ஈட்டுகிறோம் என்பதால் என்ன நமக்கு வால் முளைத்து விடுகிறதா? இல்லையே.. வீடு மற்றும் வேலையை சரிவர செய்யமுடியாமையை இயலாமை என்று எடுத்து கொள்ளவேண்டுமே தவிர ஆண்களின் மேல் குறை சொல்லுவதும், பெண் உரிமை பேசி நம் வாழ்க்கையை நாமே கெடுத்து கொள்வதும் தான் நடக்கிறது.

பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம். நம்முடை படிப்பும், வேலையும் நம்மின் பொறுமையையும் நிதானத்தையும் அதிக படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. என்னுடைய
ஆண்களின் நிழலில் பதிவில் சொன்னது போன்று ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது. குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.

அதிக படிப்பினாலும், அதிக சம்பளத்தாலும் பெண்கள் அவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருவது என்னவோ உண்மை, உணர்வார்களா?!!

அணில் குட்டி அனிதா:- அடடடடாடாடா டா?!! உபதேசம் ஆரம்பிச்சாச்சிடோய்..! நாட்டுல 2 மாசம் எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.. அம்மணி. “கஜினி “ சூர்யா ரேஞ்சுக்கு அவங்கல பத்தி மறந்து......ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடோய்... இவங்களே வூட்டல யாருக்கும் அடங்கறது இல்ல..வேலைக்கு போற திமுரு மட்டுமா... சம்பாதிக்கறோம்னு திமுறுல.. அவங்க ஆடற ஆட்டத்த நாங்க இல்ல தினமும் பாக்கறோம். பாவம்ப்பா அவங்க வூட்டுகாரரும், பையனும், இந்த அம்மணிக்கிட்ட ஒன்னும் முடியாம ......”why blood...! same blood..!, you start..... we close nnu” கம் போட்டு ஒட்ட வச்ச மாதிரி வாய தொறக்கறதே இல்ல. பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?..

தாத்ஸ் நீங்க பீட்டர எடுத்து..சொல்லுங்க...........

பீட்டர் தாத்ஸ் :-

  • Success doesn’t come to you, you go to it.
  • In the middle of difficulty lies opportunity.