அரசாங்க உத்தியோகத்தில், பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் போலிஸ்காரர்கள், உயர் அதிகாரிகளின் காருகளுக்கு வாலாட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களை எத்தனை இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்கள், அவர்களுக்கு வாலாட்டவில்லை என்றால் என்னவாகும் என்பது வேறு கதை. அதற்கு தனி பதிவு தான் போடவேண்டும்.

சென்னையில் VIP கள் வருகிறார்கள் என்றால் போதும், (ஆட்சியில் இருக்கும் போது அம்மா வருகிறார்கள் என்றால் 1 மணி நேரம், ஏன் சில சமயம் 2 , 3 மணி நேரம் கூட நிற்கவேண்டி இருந்திருக்கிறது) அரை மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று சிக்னலுக்கு சிக்னல் வாகனங்களை நிற்க வைத்து விடுகிறார்கள். VIP களின் கார்கள் சென்றவுடன், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பவும் மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என நேடு நேரம் வேலை செய்த கலைப்பில் ?!! போக்குவரத்து காவலர்கள் ரோடோர மரம், இல்லை டீ கடை என்று ஓரம் கட்டி ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார்கள். அதாவது, அவர்கள் நிற்கும் இடத்தை VIP களின் கார்கள் கடந்த மறுவினாடியே இவர்களை காணாமல் போய்விடுவார்கள்.

இங்கே நமக்கு அவசரம், அடித்தவர்களை பற்றி கவலை படாமல், போக்கவரத்து விதிகளையும் மதிக்காமல் நான் முந்தி நீ முந்தி என்று நடுநடுவே புகுந்து, யாருமே சரியாக போகமுடியாமல் நெரிசல் அதிகமாகி அவதிபட்டு, வாகனத்துடன் வாகனங்கள் மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டி, சில பேர் சண்டையில் மிக வேகமாக இறங்கிவிடுவதுண்டு. அடிதடிக்கூட சில சமயம் நடக்கும். இப்படி நடக்கும் பல சமயங்களில், போலிஸ்காரர் பக்கத்தில் இருக்கிறாரா, இதை சரிசெய்ய மாட்டாரா என நான் தேடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவர்கள் பக்கத்தில் எங்காவது மரநிழலில் நின்று கொண்டு இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து ரசித்தவாறு இருப்பார்களே அன்றி, வந்து தன் பணியை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் இது போன்ற மேல் அதிகாரிகள், VIP கள், அமைச்சர்கள் கார்களுக்கு வாலாட்ட மட்டுமே என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சமுதாய நல்லெண்ணம் உடைய சிலர், தானாக முன்வந்து போக்குவரத்தை சரிசெய்து அனுப்புவார்கள். ஆனால் நாம் இருக்கிறோமே, அவர்களையும் திட்டுவோம், இவர் யாராடா நடுவில் நம்மை நிறுத்தி நிறுத்தி அனுப்பிகிறார், வேலைசெய்யும் போலிஸ்காரரே நம் சவுகரியத்துக்கு போகட்டும் என விட்டுவிட்டார், இவர் தான் நாட்டை சரி செய்பவர் போல் முன்னுக்கு வந்துவிட்டார் என வசவுபாடுவோம். நாமும் திருந்தமாட்டோம், திருந்தியவர்களையும், திருத்துபவர்களையும் விடமாட்டோம்.

இன்று காலை அடையார் பார்க்’ கிலிருந்து வெளியில் வரும் ஏதோ ஒரு அதிகாரியின் காருக்கு வாலாட்ட மட்டும், அங்கே 3 காவலர்கள், 2 போக்குவரத்து காவலர்கள். அடையார் பார்க் வெளி கதவு டி.டி.கே சாலையில், ரோடு வளையும் இடத்தில் உள்ளது. வளைவு திரும்பும் போது இவர்கள் தடாலென்று நடுவில் புகுந்து வாகனங்களை நிறுத்தினார்கள். அடையார் பார்க்'குக்கு சற்று அருகில், எதிர் புறமாக டி.டி.கே சாலையில் ஒரு பள்ளி உள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைகள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நிறுத்தியவுடன், அதிகாரிகளின் கார்கள் சென்றிருந்தால் பரவாயில்லை. நிற்கிறோம் நிற்கிறோம் யாரும் வரவில்லை, என்ன ஹோட்டலை விட்டு கார்கள் வெளிவர அத்தனை நேரமா.. ?! இந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என கத்த, அந்த பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர், பக்கத்தில் தானே பள்ளி, "இறங்கி போங்கடா" என்றாரே பார்க்கலாம், சின்ன குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக வேக வேகமாக போக்குவரத்துக்கு நடுவில் இறங்கி குதித்து ஓட ஆரம்பிக்க, VIP களின் கார்கள் வாராததால் ஞானோதயம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், தீடீரென்று கைகாட்டி போக்குவரத்தை விட, இந்த நடுவில் இறங்கிய குழந்தைகள் நடு நடுவே சிக்கி தவிக்க ஆரம்பித்தன.. ஒரு 10 வாகனம் விட்டிருப்பார்கள், திரும்பவும், கை காட்டி நிறுத்தி விட்டார்கள். குழந்தைகள் பாவம் அங்கும் இங்கும் அல்லாடி, வாகனங்களையும் கடக்க முடியாமல், சாலையையும் கடக்க முடியாமல் கஷ்டப்பட்டன.

யார் எப்படி போனால் என அவர்கள் எதிரில் நடக்கும் குழப்பங்களை, அதுவும் ஒரு மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் இவர்கள் எப்போது தான் சக மனிதர்களை மனிதர்களாக மதித்து திரும்பி பார்த்து தன் கடமைகளை செய்வார்களோ தெரியவில்லை.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிடீங்களா அம்மணி, ஏன் நீங்க வண்டிய ஓரங்கட்டிட்டு குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரவேண்டியது தானே..செய்தீங்களா.. செய்யல இல்ல.. அப்படிதான் அவரும்.. அவரவருக்கு அவரவர் வேல முக்கியம்..உங்களுக்கு உங்க வேல முக்கியம்.. சும்மா எல்லாத்துக்கும் சவுண்டு விடறதுல மட்டும் குறைச்சல் இல்ல. ஒன்னுத்துக்கு பிரயோசனம் இல்லாமா..... சவுண்ட குறைக்கற வழிய பாருங்க.... அப்புறம் நான் குறைக்க வைக்க வேண்டியாதா இருக்கும்..சொல்லிட்டேன்.. என்ன இன்னைக்கு முந்திரி பழம் வாங்கி வச்சிருக்கீங்களா?.. இனிமே கேக்கறது எல்லாம் கேக்கற டயத்துல இருக்கனும் சொல்லிட்டேன்..

பீட்டர் தாத்தா : A great pleasure in life is doing, what people say you cannot do.