பார்வை என்பது எத்தனை அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாள், சில மணி நேரம், இரவில் மின்சாரம் இல்லாவிட்டால், திண்டாடி போகிறோம். நிறைய வீடுகளில் மின்சாரம் போனவுடன் (எமர்ஜன்ஸி லைட் இல்லை என்றால்) வேறு விளக்கு ஏற்றுவதற்குள் பெரும்பாடாகிவிடும். குழந்தைகள் இருட்டில் பயந்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள், பல நாள் பழகிய வீட்டில் முட்டி மோதி நடப்போம்.. சிறிய விளக்கில் நம் வேலைகளை செய்ய சிரமப்படுவோம். எளிதாக மொட்டை மாடிக்கு சென்று நிலா வெளிச்சத்தில் நேரத்தை கழிக்கத்தான் நாம் விரும்புவோம்..

ஆனால், பார்வையற்றவர்கள்? அவர்களுக்கு தெரிந்த ஒன்று இருட்டுமட்டுமே..இந்த உலகமே அவர்களுக்கு ஒரே இருட்டுதான். இருட்டை தவிர வேறொன்றும் அறியாதவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கிறார்கள்.. பூக்கள், வானம், மழை, நிலவு, ஈ, எறும்பு, பாம்பு, பல்லி, ரஜனி, கமல், கைப்புள்ள,அணில் குட்டி என்று எதுவுமே தெரியாது.

என் அப்பாவின் சித்தி மகனுக்கு (எனக்கு சித்தப்பா’வாக வேண்டும்), எனக்கு தெரிந்து கண் தெரியாது. ஆனால் அவருக்கு கண் தெரிந்து கொண்டுதான் இருந்ததாம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைந்து தெரியாமலே போய்விட்டது. என் அப்பாவிடம் ஏன் அவரை டாக்டரிடம் காட்டி குணப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அவருடைய பார்வை நரம்புகளே செயலிழந்து போய்விட்டன அதனால் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டதாக சொன்னார். இவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். இவருடன் சிறு வயதில் நிறைய நாள் நான் கழித்திருக்கிறேன். உச்சிக்கு வந்த சூரியனை நேராக பார்த்து காட்டுங்கள் என்று அடம்பிடித்து அவரை பார்க்க வைப்பேன். அவருக்கு கண்கள் கூசாது, நேராக சூரியனை பார்ப்பார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும், நான் பார்க்க முயற்சி செய்வேன்..முடியாது..

அவரால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்வார். எனக்கு மறக்கமுடியாதது, அவர் எப்போது கழிவரை சென்றாலும் (இந்தியன் மாடல்) தண்ணீர் ஊற்றிவிட்டு என்னை அழைத்து சரியாக பேசீனில் தண்ணீர் ஊற்றியிருக்கிறாரா என்று பார்க்க சொல்வார், சில சமையங்களில் சரியாக இல்லையென்றால், சித்தப்பா நான் ஊற்றுகிறேன் என்று சொன்னால் விடமாட்டார், இல்லை, நீ இங்கேயே இரு, என்று தண்ணீர் பிடித்து பிடித்து ஊற்றுவார், நான் சரியாக இருக்கிறது என்று சொல்லும் வரை விடமாட்டார். இப்படிப்பட்ட சமயங்களில் கண் தெரியாமால் அவர் சிரமபடுவதை பார்க்க மிகவும் வேதனையாக நான் உணர்ந்து இருக்கிறேன்.

இறந்த பின் மண்ணுக்கு போகும்/எரிந்து போகும் உடலுடன் நம் கண்களும் வீணாகத்தான் போகப்போகிறது.. ஒவ்வொருவரும் அதை வீணாக்காமல் கண்தானம் செய்தால் எத்தனை பேர் இந்த உலகத்தை நம் கண்களால் பார்ப்பார்கள். இறந்தபின் கண்ணை எடுத்துவிட்டால் முகம் அசிங்கமாகி போகும் என உறவினர்கள் அதை செய்ய விடுவதில்லை. ஆனால் கண் எடுத்தவுடன், அதை எடுத்தது தெரியாமல் தான் தைத்து அனுப்புகிறார்கள். இதில் இன்னுமொரு விஷயம், நாம் கண் தானம் செய்து இருந்தாலும், நாம் இறந்தவுடன் நம் உறவினர்கள் அதை சில மணி நேரங்களுக்குள் சொல்லி, கண்களை தானம் செய்ய வேண்டும். இங்கு கவனிக்க வேண்டியது, நம் துக்கத்தை அடுத்து வைத்து தான் இதை செய்ய வேண்டும் என்பதே.

தயவுசெய்து கண்தானம் செய்யுங்கள்..நம் கண்களால் யாரோ ஒருவர் இவ்வுலகை பார்க்கட்டுமே...

அணில் குட்டி அணிதா :- ஆங்..இதோடா.. கிளம்பிட்டாங்கய்யா... ஒரு வாரத்துக்கு முன்னாடி.. வூட்டாண்டா உள்ள பைபாஸ் ரோட்ல.. இராத்திரி ஒரு 8 மணி இருக்கும் போய்கிட்டு இருந்தாங்க.. பகல்லையே அம்மணிக்கு பசுமாடு தெரியாது (சோடா புட்டி) இராத்திரியில கேக்கவா வேணும், நிஜமாவே ஒரு பசுமாடு எதுதாப்பல வந்து நிக்குது..அம்மணி அது கிட்ட போற வரைக்கும் கவனிக்கல.. அத டச் பண்ற நேரத்துல..பின்னாடி உட்கார்ந்திருந்த இவங்க பையன்..அம்மா......!. மாடுமா....! வண்டிய நிறுத்து ..என சவுண்டு விட்டுட்டு, கிரேட் ஜம்ப் பண்ணிட்டான்.. அம்மணி தட்டு தடுமாறி வண்டிய சைடு வாங்கி மாட்டு மேல மோதாம எஸ்கேப் ஆய்ட்டாங்க.. பையன் வுடலியே..”அம்மா சாவறது நீ சாவு என்னையும் ஏன் சேத்து சாவடிக்க பாக்கறன்னு..” அம்மணிய டோஸ் விட்டுகிட்டு இருந்தான்.. இதுக்கு அப்புறமா தான் அம்மணிக்கு இந்த ஐடியா வந்திருக்கனும்..

அம்மணி.. சூப்பர் ஐடியா..!!. உங்களுக்கு இப்பவே சரியா கண்ணு தெரியலயே..உங்க ஒன்னு விட்ட 2 விட்ட சித்தப்பா மாதிரி ஏதாவது ஆயிடுத்துன்னா என்னா பண்றதுன்னு இப்பவே அடிப்போட்டு வைக்கறீங்களா?! பாத்துக்கோங்க பா.. கண் தானம் செய்ய சொன்னது..ஊருக்கு இல்ல.. வருங்காலத்துல தேவைபடுமோன்னு இப்பவே சொல்லிவைக்கறாங்க.. நேரக் கொடுமைடா இது எல்லாம்

குறிப்பு :- நம்ம கவிதா பிளாக்’க்கு புதுசா ஒருத்தர் அறிமுகம் ஆகிறார்.. அவரு பேரு பீட்டர் தாத்தா - பீட்டர் இங்கிலீஷ்ல தத்துவம் எல்லாம் உங்களுக்கு சொல்லுவார். இன்னையிலிருந்து பீட்டர் தாத்தாவின் தத்துவம் ஆரம்பம்...என்னை மாதிரி , கவிதா மாதிரி யார் கூடேயும் பேச மாட்டார். No interactions. இவர் only for தத்துவம்..தாத்தா ரெடி..ஸ்டார்ட்...

தாத்தாவின் தத்துவம்:- “Don’t sit back and take what comes.. go after what you want”