பொதுவாக நாம் மனிதர்களை எதை வைத்து மதிப்பிடுகிறோம். அவர்களின், படிப்பு, பணம், குணம், தோற்றம், பழக்க வழக்கங்கள் என சொல்லி கொண்டே போகலாம். சமீபத்தில் எனக்கு கிடைத்த அனுபவம், படிக்கும் பத்திரிக்கை, புத்தங்ககளை கொண்டு மனிதர்களை எடை போடுகிறோம் என்பதே. எனக்கு ஒன்று புரியவில்லை, The Hindu, Economic Times, Indian Express மற்றும் பல ஆங்கில தின பத்திரிக்கைகள் படிப்பவர்களை மிகுந்த தரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், தினமலர், வாரமலர், தினதந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களை தரக்குறைவாகவும், தாழ்வாகவும் நினைக்கும் பண்பு நம்மில் உள்ளது.

கன்னிதீவு (சிந்துபாத்) என்ற ஒரு பட கதை தினப்பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. அதை தொடர்ந்து சிறுவயதிலிருந்து படித்து வந்த என்னுடைய கணவர், நடுவில் பல காரணங்களால் படிப்பதை விட்டுவிட்டார். இப்போது சிந்துபாத் என்ற தொடர் சன் டீவி யில் ஒளிபரப்பபடுகிறது. அதனை விடாமல் உட்கார்ந்து ரசித்து பார்க்கிறார். அவர் தமிழ் பத்திரிக்கை படித்ததற்காகவும், இத்தனை வயதுக்கு பிறகு தான் படித்த கதையின் தொடர்ச்சியை ஆர்வத்துடன், டிவியில் பார்க்கிறாரே என்று தாழ்வாக எடைபோடுவதா, இல்லை அவர் The Hindu, Business Line, Management weekly, monthly books படிக்கிறாரே அதனால் அவரை தரம் உடையவராகவும், உயர்ந்தவராகவும் நினைப்பதா.? படிப்பதை வைத்து ஒருவரின் தரத்தையும், குணத்தையும் எப்படி ஊகிப்பது. அது சரிதானா?

வாரமலர் ஒருவர் படிக்கிறார் என்பதால் மட்டுமே அவர் இப்படி பட்டவர் தான் என நாம் முடிவுக்கு வந்து விட முடியுமா?! இல்லை இவர் ஹிந்து பத்திரிக்கை படிக்கிறார் இவரின் தகுதி மிக உயர்ந்தது என முடிவுடன் இருக்கலாமா?. பள்ளியிலும், கல்லூரியிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது எல்லோரும் அறிவர். மெத்த படித்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களையே இவர் நல்லவர்/கெட்டவர் என்பதை அவரின் இயல்பான குணம் வெளிபடும் போது தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, பெண்களை ஏமாற்றும் எத்தனை ஆண்கள் நம்மிடையே உண்டு அதே போல் ஆங்கிலத்தில் பேசி ஆண்களை இழிவு செய்யும் எத்தனை பெண்கள் நம்மிடையே உண்டு. என் நண்பர்கள் சிலர் ஒரே மாதிரி பட்ட படிப்பு படித்தவர்கள். அதில் ஒருவர் IIT யிலிருந்து வந்தவர், IIT என்றாலே அதனுடைய தரம் நமக்கு தெரியும். அந்த தரத்தை அந்த நண்பரிடம் பார்க்கலாம். மற்றவர் சாதாரண கல்லூரியிலிருந்து வந்தவர். இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதற்கோ விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது, இந்த IIT-நண்பர் என்னிடம்”பாரு, ரிக்க்ஷாகாரன் மாதிரி பேசுகிறான் அவன், ஒரு என்ஜினியர் மாதிரியா பேசுகிறான்” என்றார். அவரோ “இவர் IIT பந்தாவெல்லாம் நம்ம கிட்ட காட்டறார்..நாங்க ரிக்க்ஷாகாராங்களாவே இருக்கிறோம், ஆனா இவனாட்டம் திருட்டுதனமா பண்றோம்” என்றார்.

மெத்தபடித்தவர்களும், ஆங்கலத்தில் அளப்பவர்களும், ஆங்கில பத்திரிக்கைகள் படிப்பவர்களும் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என சொல்லிவிட முடியாது, தமிழில் பேசி, தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள், தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது.

மனிதர்களின் நற்குணம் ஒன்றே அவர்களை யாரென்று சொல்லும். அதை அறிந்து மனிதர்களின் தரத்தை உணர நாம் முயற்சிக்க வேண்டும்.

அணில் குட்டி அனிதா: அம்மனி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா? உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களா.. எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா பீட்டர் English ல பேசறீங்களே.. அதான் சரியா என்னால உங்கள judge பண்ணமுடியல... தமிழ் மட்டும் என்னா?.. ஆற்றலரசி அக்கா பொன்ஸ்’ ஐ கேட்டா தெரியும் நீங்க தமிழ்ல எவ்ளோ..தப்பு பண்றீங்கன்னு... இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... இதுல என்ன மேட்டர் னா அம்மனி தமிழும் தெரியாம.. English ம் தெரியாமா.. எல்லாம் தெரிஞ்சமாதிரி உங்ககிட்ட எல்லாம் சீன் போடறாங்க பாருங்க அதுதாங்க.... அதுதாங்க என்னால தாங்கவே முடியல.....

(ஒரு ரகசியம்-அம்மனி அவங்க friend அ நக்கலா “ஓ வாரமலர் படிக்கறீங்களா?..ன்னு கேட்டாங்க..அவரு ..டென்ஷன் ஆகி வுட்ட சவுண்டுல தான்..இப்படி பதிவு போட்டு இருக்காங்க...அம்மனி காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு அவரு சவுண்டு வுட்டாருன்னா பார்த்துகோங்க..)