மனசு அடக்கமின்றி திரியும் பலநேரங்களில் மெளனமாய் மனதுடன் அறிவை பேசவைக்கும் தருணங்கள் அதிகமாகி, இரண்டும் விவாதித்து விடைக்கிடைக்காத பல நேரங்களில் அறிவும், மனசுடன் கைக்கோர்த்து கொண்டு ஆனந்த கூத்தாடும். அடக்கமுயலும் பிரச்சனைக்கு திர்வு இன்றி, பதில் விளங்காத மெளனப் புலம்பல்களாகவே தொடரரும்..

பதில்கள் இல்லாத கேள்விகளாய்…ஏன் இந்த மனசு இப்படி.. என்னேரமும் குரங்கை போல் தாவி தாவி…… தாவும் போது….ஏதோ மிக தூரத்தில் இருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயம் கூட சில நேரம். எப்போதோ அப்படி விழுந்தவிட்ட தருணங்களின் நினைவுகள் நெஞ்சை அடைக்கும். கண்கள் குளமாகும். எத்தனை முறை விழுந்தாலும், அடிப்பட்டு ரத்தம் சிந்தினாலும் விடாது முயற்சிக்கும் மனதை பாராட்டுவதா..அதனுடம் கைக்கோர்த்து கொள்ளும் அறிவை சீ… அறிவே உனக்கு அறிவில்லையா…..என கோபப்படுவதா..?

மாடு தன் உணவை வேகமாய் உண்டு விட்டு, பிறகு, பொருமையாய் அமர்ந்து நாளெல்லாம் அசைபோடுமே..அதுபோல் எப்போது பார்த்தாலும் அறிவும், மனசும் நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை என அசைப்போட்டு கொண்டே இருக்கிறது…

1. நடந்தவை சரியாக இருந்துவிட்டால், இப்படியே செய்து இனிமேலும் எல்லாவற்றையும் சரியாக்கிவிடாலாம் என்றால்
2. அடுத்து நடப்பவை தவறாக முடியும் போது..
3. நடக்க இருப்பவை பற்றி, சரியான கோணத்தில் மட்டும் இல்லை, தவறான கோணத்திலும் சிந்திக்காமல் இருக்க முடியவதில்லை..

ஏன் இத்தனை சிரமம் எடுத்து சிந்திக்க வேண்டும், இப்படி எல்லாவற்றிக்கும் யோசிக்க ஆரம்பித்து, எல்லாமே நல்லபடியாய் ந்டந்து விட்டால், எல்லோருமே எல்லாவற்றையும் யோசித்தே செய்வார்களே..அது விதி..என்று கை பிசைய வேண்டிய அவசியம் இல்லையே. எது எப்படி அமைகிறதோ அதை அப்படியே எடுத்து கொண்டு, வருவது வரட்டும்..போவது போகட்டும்.. என்று எளிமையாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என கூறுபவர்களை பார்க்கும் போது எப்படி இவர்களால் முடிகிறது என்று ஆச்சரிமாக தான் இருக்கிறது.

தெருவோரம், வயிற்று பசியில் பிச்சை எடுக்கும் ஒரு வயதான மூதாட்டி, இவர்கள் காசு போடுவார்கள் என வயதுக்கு மீறி, தள்ளாட்டத்தையும் மீறி ஓடி வந்து கை நீட்டும் போது, ஒதுக்கும் பார்வையோடு ஒதுங்கி போகும் மனிதர்களை பற்றி யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

8 வயதுக்கூட ஆகாத குழந்தை, சோற்றுக்கு வழி இல்லாமல், பெற்றவர்கள் “போடா போய் உன் வயிற்று பிழைப்பை பார்” என்று எவருடனோ அனுப்பி வைக்க, மளிகை கடையில் ஒரு கூலியாக தன் வயிற்றை கழுவிக்கொள்வதை கேட்டு/பார்த்த பிறகும் எல்லோரையும் போல் “டேய் ஒரு பால் பாக்கெட் கொடு” என்று வாங்கிகொண்டு வந்துவிடமுடிவதில்லை..

பக்கத்து வீட்டில் செடி வளர்க்கிறார்கள் என்று தானும் தொட்டி வாங்கி வைத்து, வளர்க்கிறேன் பேர்விழி என்று, தண்ணீர் சரிவர ஊற்ற முடியாமல் அந்த செடி வாடி வதங்கி..”ஐயோ மனிதர்களே எனக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என கதுறும் சத்தம் கேட்டும், திரும்பிபார்க்காமல் எனக்கென்ன அது அவர் வீட்டு செடிதானே என வந்து விடமுடிவதில்லை.. ஒருமுறை ஊற்றுவதை யாரேனும் பார்த்து விட்டால் போதும், மேடம்! கொஞ்சம் செடியை பார்த்துகோங்க என்று சொல்லும் மனிதர்களின் நிலை குறித்து நினைக்காமல் இருக்க முடிவதில்லை..

பஸ்ஸில் அமர்ந்து வரும் கொஞ்ச நேரத்தில் பக்கத்து சீட்டு பெண்மணி சொல்லும் அவரின் சொந்த இன்ப/துன்ப கதைகளை பொருமையுடன் கேட்டுவிட்டு..ஏன் இவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை மனதுக்குள் கேட்காமல் இருக்க முடிவதில்லை ..

எல்லோரும் பேசி சிரித்து கும்மாளம் இட்டுகொண்டு மதிய உணவு உண்ணும் போது, என்னிடம் பேச நினைக்கும் நண்பரின் பார்வையை புரிந்து, என்ன சொல்லுங்க..ஏதோ சொல்லனும்னு நினைக்கறீங்க , ஏன் யோசிக்கறீங்க என்று கேட்டால், ஆச்சரியத்துடன்..எப்படிங்க என் மன ஓட்டத்தை கண்டுப்பிடிச்சீங்க என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நாளைக்கு லன்ச்’க்கு எல்லோரும் வெளியில போறீங்களே என்னையும் வரச்சொல்லனுமா?.. நண்பர் “இல்லைங்க”.. அப்போ நான் வரவேண்டான்னு சொல்லனுமா?! நண்பர் “அய்யோ..இல்லைங்க…”சரி, உங்களுக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தீங்களே? அதை பற்றி கேட்கனுமா?.. நண்பர் “இல்லைங்க” அதற்கு மேல் பொறுமை இல்லாமல், பாருங்க ..நீங்க ஏதோ சொல்ல நினைக்கறீங்க என்னன்ன சொல்லுங்க இதற்கு மேல் என்னால் ஊகிக்க் முடியாது என சொல்லி அவர் சொல்ல வந்ததை தெரிந்து கொள்ளாமல் விடவதில்லை என்ற நிலைக்கு மனமும், அறிவும் ஒன்றாக தள்ளபடுவதை தடுக்கமுடியாத நிமிடங்களை நினைக்கும் போது..நாம் ஏன் நம்மிடம் இல்லை என …அசைபோடும் நேரங்களில் யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

இப்படிதான் எல்லோருடைய சிந்தனை ஓட்டமும் இருக்குமோ ..இல்லை நாம் மட்டுமே இப்படி எதையும் செய்யும் முன்னும், செய்த பின்னும் யோசிக்கிறோமோ….வினா, பதில், பிரச்சனை, அமைதி, ஆட்டம், எரிச்சல், கோபம், சிரிப்பு., அழுகை என அலையும் புத்தியை அவ்வபொழுது உணர்ந்து பிடித்து இழுத்து நம் பிடிக்குள் வைப்பது கூட எத்தனை சிரமமாகிறது. அலுவலகத்தில் பரவாயில்லை.. வீட்டில் மோசம்..இருமுறை கூப்பிட்டு திரும்பவில்லை என்றாலே “யேய் லூசே”..என்று பெயர் மாறி போகிறது…..

எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களின் எண்ணங்களிலும். செயல்களிலும் எப்போதுமே ஒரு முரண்பாடு….உதடுகள் ஒன்று பேசும், அவர்களின் கண்களை உற்று நோக்கினால், உள்மனசின் விகாரம் பேயாய் நம்மை பயமுறுத்தும்..

நல்லவைகளை யோசிக்க யோசிக்க முடிவில் மிஞ்சி இருப்பதோ.. அதற்கு நேர் எதிர்.. ஊரோடு ஒத்து வாழ்..தனி மரம் தோப்பாகாது., ஊர் வம்பு நமக்கெதற்கு, சமுதாயம் என்பது சாக்கடை அதில் நீ மட்டும் பன்னீராய் எப்படி இருப்பாய், புத்தி இருப்பவர்கள், உன்னை போன்று யோசிக்க மாட்டார்கள், வேலையை முடித்து விடுவார்கள் என்று அறிவுரை கூறுபவர்கள் அத்தனை பேரும் ஒரு புரம் இருக்க..சிந்தித்து இது தான் சரி.. இது தவறு என்று முடிவுடன் இருக்கும் நாம் பலரின் கண்களுக்கு கேலி கூத்தாகி போய் கொண்டிருப்பது என்னவோ நிஜம்தான்… செயற்படுத்த முடியாத நிஜங்கள் ஆவேச புலம்பல்களாய் மனதுக்குள் மெளனமாய்..தொடர்கிறது……….

அணில் குட்டி அனிதா :- ம்ம்..ஹா.. …..கவி.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. …பாருங்க கண்ணு சொக்குது.. என்ன அதுக்குள்ள தூக்கம்ன்னு கேக்கறீங்களா?.. எல்லாம் மேல இருக்கறத படிக்க போனதால வந்த.து… சரி.. நீங்க ஓவர் தெளிவா எத பத்தியோ எழுதி இருக்கீங்களே....அது என்னா?!! மக்கா உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா எனக்கு லெட்டர் போடுங்க.. அட்ரஸ் கவிதாவோடது தான்..எப்படியாவது எனக்கு வந்துடும், கவலபடாதீங்க..

அணில் குட்டி அணிதா
C/o. கவிதா கெஜானனன்
கீல்பாக் 3வது மெயின் ரோடு
கீல்பாக்கம்
சென்னை